தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவித்தார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்காக தயார்படுத்தி வந்தார் அழகிரி. தேர்தலை மையமாகக் கொண்டு நடைபெறும் ஏர்கலப்பைப் பேரணியில் விரைவில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கே.எஸ்.அழகிரி சில நாட்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுடன், கடந்த 2ஆம் தேதி ஸ்டாலினை சந்தித்து ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார். அதற்குப் பிறகு கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டங்களிலும், காங்கிரஸ் பட்டியலினப் பிரிவு கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசினார்.
தற்போது கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ராகுல் பங்கேற்கும் ஏர்கலப்பை பேரணி நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்புதான் சந்தித்தார் என்பதால் அவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் தத், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் அழகிரியை தொடர்புகொண்டு பேசினேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலத்தை பெற வாழ்த்தினேன். கொரோனா தொற்று சமயத்திலும் அவர் தைரியமாக பணியாற்றி வந்தார்” என்று கூறியுள்ளார்.