கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது எனஅமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 16ஆம் தேதி துவங்கிவைத்தார். இதற்காக 5,36,500 கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு எடுத்துவரப்பட்டன. இந்த தடுப்பூசிகள் சென்னையிலிருந்து 10 மண்டலங்களுக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சியிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வாகனத்தில் அனுப்பி வழியனுப்பிவைத்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
read more: என் வீட்டில் கல் எறியச் சொன்னார் ஸ்டாலின்: குஷ்பு குற்றச்சாட்டு!
தடுப்பூசி அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய விஜயபாஸ்கர், “தடுப்பூசி போட்டுக் கொண்ட 42 நாள்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி வரும். முதல் டோஸ் போட்டவுடன் மது அருந்தக் கூடாது. 2 ஆவது டோஸ் போடும் வரையில் 28 நாள்களுக்கு மது அருந்தக் கூடாது. தடுப்பூசி போடும் நபர்களை எதற்காகவும் தனிமைப்படுத்த வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளார்.