புதுச்சேரியில் 31 வது துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தான் காரணம் என்று கருத்து பரவிய நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க, துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்று கொண்டார்.
இந்தநிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,சபாநாயகர் சிவக்கொழுந்து, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சௌந்தரராஜன் கூறியதாவது:
புதுச்சேரி மாநில மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும், மக்களுக்கான ஆளுநராக இருப்பேன் என்றும் தெரிவித்தார். மேலும், இரட்டை குழந்தைகள் போல் இரு மாநிலங்களையும் பார்த்துக்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.