முதலமைச்சரின் பகல் கனவு!
வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு என்பதற்கு எடுத்துக்காட்டு என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராசரின் 123 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராசர் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காமராசரின் திருவுருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் காமராசர் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. இந்த விழாவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மிக பெரிய பொதுகூட்டமாக நடத்த உள்ளது. மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என நகரம் எங்கும் காமராசர் பள்ளிகளைத் திறந்தார். ஆனால் இன்று திமுக ஆட்சியில் நகரம் முதல் கிராமம் வரை பள்ளி, கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் கடைகளும், போதை பொருட்கள் விற்கப்படுவது மிகுந்த வேதனைக்குரிய விசயமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரியில் மீண்டும் நாகரிகமற்ற செயல் நடந்துள்ளது. மாணவர்கள் குடிக்கின்ற தண்ணீர் தொட்டியில் மலம் கலந்து உள்ளனர். அதற்கு காரணமும் குடிபோதை என தெரியவருகிறது. குடியை கட்டுப்படுத்த முடியாமல் குடிபோதையில் மக்கள் தவித்து கொண்டு இருக்ககூடிய நிலையை ஆட்சி ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக டாஸ்மாக் கடைகளை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பாலியல் தொல்லைகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அது போன்ற நபர்களுக்கு தூக்கு தண்டனை வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையாக உள்ளது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிகளை தமாக தொடங்கியாதா என்ற கேள்விக்கு, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்பபை நோக்கி அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட ஒத்த கருத்து உள்ள கூட்டணிகள் செல்கிறது. எதிர்கட்சி தலைவரின் பிரச்சார கூட்டம் மிக பிரகாசமாக ஆரம்பித்துள்ளது. அதில் தமாகவும் இடம் பெறுமா என்ற கேள்விக்கு, எல்லா கட்சிகளும் உள்ளது. எல்லா பெயர்களும் உள்ளது. அதனை சரியாக கேட்க வேண்டும் என நினைக்கிறேன் என கூறினார். வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, பகல் கனவு என்பதற்கு எடுத்துக்காட்டு என பதில் அளித்தார்.




