செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைகழகத்துடன் இணைக்கக் கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கண்டனம்
இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்தியப் பல்கலைக்கழகமாகப் பெயர் சூட்டி, அத்துடன், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட எடுக்கப்பட்டுள்ள மத்திய அரசின் முடிவுக்குத் தி.மு.கவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உயிரோட்டத்துடன் நிதி ஆதாரத்துடன் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். ஆனால், அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகும், இந்த மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும், திட்டமிட்டு முடக்கப்பட்டது. கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியிலும் ஆறு ஆண்டுகால பாஜக ஆட்சியிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பாழ்படுத்தப்பட்டு விட்டது.
இணைக்க கூடாது
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைச் செயல்பட விடாமல் முடக்கி, மத்திய அரசு உள்நோக்கத்துடன் நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்குரியது. தமிழ்மொழியைச் சிதைத்து விடலாம் என்று மத்திய அரசு கனவிலும் எண்ண வேண்டாம். எனவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட உத்தரவிட்டு, இந்த நிறுவனத்தை, மைசூருவில் உள்ள ‘பிபிவி’ பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பிற்போக்குத்தனமான முடிவினைக் கைவிட வேண்டும் முதல்வர் பழனிசாமி உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசின் இந்த முடிவினைக் கைவிட உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.