உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து, திமுகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் சில பேச்சுக்கள் சர்சையாகவும் மாறியது.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்ப பெண் உறுப்பினர்கள் பற்றி அவதூறாகவும், கேலியாகவும் சித்தரித்து திமுக தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை மாநகர ஆணையரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் மனுவில், சட்டமன்றத் தேர்தலுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் அவர்மீது வேண்டுமென்றே, அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகளையும் – தரமற்ற விமர்சனங்களையும் அவர்மீது சுமத்தி வருகின்றன.
இந்த நிலையில் உதயநிதி மற்றும் அரசியலுக்கே தொடர்பில்லாத அவரது குடும்ப பெண் உறுப்பினர்களின் படங்களை கொண்ட சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளர் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அரசியல் ரீதியாக எந்த விமர்சனங்களையும் உதயநிதி ஸ்டாலின் எதிர்கொள்ள தயாராக உள்ளார் எனச் சுட்டிக்காட்டினார்.
read more: என்னை நடுத்தெருவில் நிறுத்த அதிமுக அரசு முயற்சித்தது: கமல்ஹாசன்
அரசியலுக்கு அப்பாற்றபட்ட, சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்கள்மீதும் பெரும் பற்று கொண்ட குடும்ப பெண் உறுப்பினர்களை கேலியாகவும் – அவதூறாகவும் – தரக்குறைவாகவும் பேசி, அவரது குடும்ப பெண் உறுப்பினர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதத்தில் பேசியும் – சுவரொட்டிகள் ஒட்டியும் வருவது, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
ஆகவே, பெண்களை இழிவுபடுத்தும் கெட்ட நோக்கோடு செயல்படும் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள்மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் மற்றும் ‘இந்திய அச்சகச் சட்டப்படி’ (Indian Press Act) தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.