தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் கடன் வழங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த பட்ஜெட் தாக்கலின் போது தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் அறிவித்தார். எனினும், பல்வேறு நிதிச் செலவீனங்களுக்காக தமிழகத்திற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டது.
இதனிடையே சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்ற மத்திய அரசு அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன.
read more: ரஜினி, கமலுக்கு வாழ்த்துக்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில் கூடுதல் கடன் வழங்குவது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ. 4,509 கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் மாநிலப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதால் இது தொடர்பாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.