முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததையடுத்து, இந்த மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு செலுத்தப்படுகிறது.
அந்த மருந்துகள் பாதுகாப்பானது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளுக்கு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
read more: தமிழகத்தில் வேலை..ஆனால் மும்பையில்தான் தேர்வு: மத்திய அரசுக்கு எம்.பி எதிர்ப்பு!
6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டதாகவும், முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பு செலுத்தப்படும் என்றும் அறிவித்த அமைச்சர், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவரித்தார்.




