விஸ்வரூபம் திரைப்படத்தின் போது தன்னை நடுத்தெருவில் நிறுத்த அதிமுக அரசு முயற்சி செய்ததாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுகவினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரின் இதயங்களில் எம்.ஜி.ஆர் வாழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது எம்.ஜி.ஆரின் வாரிசு நான்தான் எனவும், அவரது கனவை நிறைவேற்றுவேன் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தான் எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் கமல்.
இந்த நிலையில் சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு கமல்ஹாசன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் காலத்தை வென்றவன் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் இல்லத்திற்கு வரவில்லை. என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது. எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு. இங்கு இருக்கும் அனைவருமே தமிழ் பேசும் திராவிடர்கள் தான். பட்டா போட்டே பழகியதால் எம்ஜிஆர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சிலர் கூறுகிறார்கள் என்றார்.
எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான் என மீண்டும் அழுத்தமாக பதிவு செய்த கமல், “அதிமுகவில் சிறியதளவில் பயன்படுத்திய எம்.ஜி.ஆர் படம் தற்போது பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு நான் தான் காரணம். விதை நான் போட்டது சிவாஜி வசனம் மட்டுமல்ல. அது எம்.ஜி.ஆருக்கு ஆனதுதான். விஸ்வரூபம் படத்தின் போது அதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது. எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் அப்போது எனக்கு அந்த நிலை வந்திருக்காது” என்றும் குறிப்பிட்டார்.




