எந்த தலைவராவது கட்சி தொடங்கிவிட்டு ஷூட்டிங் செல்வாரா? என்று ரஜினிகாந்திற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக காங்கிரசின் முக்கிய தலைவருமான ஜோதிமணி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ரஜினியின் ஷூட்டிங்
அரசியல் என்பது தீவிரமாக அணுகக்கூடிய விஷயம். அனைத்து கட்சி தலைவர்களும் வேறுபாடுகள் இல்லாமல் களத்தில் நின்று மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார்கள். மக்களின் குறைகளை கேட்டு சேவை மனப்பான்மையோடு மக்களுக்காக உதவிகள் செய்யும் மிகப்பெரிய பணி அரசியல் பணி. ஆனால் கட்சி தொடங்கி விட்டு 40 நாட்கள் ‘அண்ணாத்த’ ஷுட்டிங் செல்லப்போகிறாராம். இவரைப்பற்றி வேறு என்னத்த சொல்வது?
கால்கூசுகிறது
உலகத்திலேயே எந்த அரசியல் கட்சி தலைவராவது அரசியல் கட்சியை தொடங்கிவிட்டு 40 நாட்கள் சினிமா ஷுட்டிங் செல்வார்களா? அப்படி செல்வதில் இவர்தான் முதல் தலைவர். இப்படி செல்பவரை நம்பி மக்கள் ஓட்டு போடுவார்களா? இது பேச வேண்டிய விசயமே இல்லை.
மக்கள் துயரத்திலும், வறுமையிலும் வாடும் போது, விவசாயிகள் போராடும்போது அவர்களது உழைப்பை சுரண்டி அவசியமில்லாமல் ஆடம்பரத்துக்காக உருவாக்கப்படும் பாராளுமன்ற கட்டிடத்தில் கால் வைக்க வேண்டும் என்று நினைத்தாலே மனது கூசுகிறது. இந்த கூச்சம் இரக்கமற்ற ஆட்சியாளர்களுக்கு இல்லையோ? இவ்வாறு அவர் கூறினார்.