தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சட்டத்துறையின் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட பல முக்கிய திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கழகத்துக்கு துணை செய்யும் அமைப்பாக வழக்கறிஞர் அணியை நான் சொல்ல மாட்டேன். கழகத்துக்கு துணிச்சலை வழங்கும் அமைப்பாக வழக்கறிஞர் அணியை நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக இதுபோன்ற அமைப்புகளை, துணை அமைப்புகள் என்று தான் சொல்வோம். ஆனால் வழக்கறிஞர் அணியானது, துணிச்சல் தரும் அமைப்பாக உள்ளது என்றார்.
சட்டத்துறையின் சாதனைக்கு மகுடமாகச் சொல்லத்தக்கது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. நமக்கு ஜெயலலிதா மீதோ, சசிகலா குடும்பத்தினர் மீதோ தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்ற அவர், 1991-96 ஆம் ஆண்டு என்பது தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லத் தக்க அளவில் தமிழகம் சூறையாடப்பட்டது. இதனைத் தடுக்க வேண்டிய கடமை திமுகவுக்கு இருந்தது என்றும் கூறினார் ஸ்டாலின்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஜெயலலிதாவை புனிதரைப் போல இன்னமும் சிலர் திட்டமிடுகிறார்கள், சில ஊடகங்கள் அதனைப் பேசாமல் மறைக்கின்றன என்றால் – 18 ஆண்டுகால சட்டப்போராட்டம் என்பது சாதாரணமானது அல்ல என சுட்டிக்காட்டினார்.
read more: ஜனவரி இறுதியில் தமிழகத்தில் பிரச்சாரம் தொடங்கும் ராகுல்
மேலும் அவர், “சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் நான்கே மாதத்தில் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வெற்றியைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். மத்திய மாநில அரசுகளின் அதிகார பலம் அவர்களுக்கு இருக்கிறது” என்றதோடு,
அந்த அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள். அது ஒன்றும் ரகசியம் அல்ல. அதனை தலைமைக் கழகம் எதிர்கொள்ளும். அந்த நேரத்தில் சட்டத்துறையின் பணி மிக முக்கியமானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. நீதியை நிலை நாட்ட தி.மு.க. சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும் என உரையாற்றினார்.