தன் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அரங்க பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்குபெற்றார். அதில் பேசும்போது, “மோடிக்கு எடுபிடியாக இருப்பதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு’ என்றதோடு அவதூறான வார்த்தை ஒன்றையும் தெரிவித்து சிரித்தார்.
இதனைக் கேட்டு நிகழ்வில் பங்கு பெற்றிருந்த கட்சி நிர்வாகிகளும் சிரித்தனர். 36 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணிச் செயலாளருமான ஜெயானந்த் திவாகரன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
read more: கனிமொழியைத் தடுத்த போலீஸ்: எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்
இந்த நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். விழுப்புரத்தில் பேசிய அவர், சசிகலாவின் காலைப் பிடித்ததால் முதலமைச்சர் ஆனார் எடப்பாடி பழனிசாமி என்று சொன்னேன். அதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான் பேசியது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். நான் கலைஞரின் பேரன். எந்த வழக்கு போட்டாலும் அதனை சந்திக்க தயாராகவே இருக்கிறேன். மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறியுள்ளார்.