2020ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டி.என்.ஏ தொடர்பான ஆய்வு மேற்கொண்ட, இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசும், இரண்டாவது நாளான நேற்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, இன்று 2020ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜெர்மனியின் எம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் அமெரிக்காவின் ஜெனிபர் டவுட்னா ஆகிய இருவருக்கு கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
செல்களின் டிஎன்ஏக்களில் மாற்றம் செய்யும் மரபணு பொறியியல் தொடர்பான அவர்களது ஆய்வினை பாராட்டி அவர்களுக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.