சுமார் 4000 ஆண்டுகள் பழமையான, கனடாவின் கடைசி முழுமையான பனிமுகடு பாதியாக உடைந்தது. உடைந்த பிறகு, இரண்டு துண்டு பிரிந்து, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட பனிப்பாறையாக உருவாகியுள்ளது
காலநிலை மாற்றம் இந்த நிகழ்வை தூண்டியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த கோடையில், பிராந்தியத்தின் வெப்பநிலை 1980 முதல் 2010 வரை இருந்த வெப்பநிலை சராசரியை விட 5 டிகிரி அதிகமாக இருந்தது.
சற்று கூடுதல் வெப்பம் நிறைந்த காற்று, கடல் காற்று மற்றும் பனிமுகடு, சுற்றி ஒடும் நீர்நிலை ஆகியவையும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
உலகின் வடக்கு அரைக்கோளத்தின் கடைசி பனி முகடு என அறியப்பட்ட இது ஒரு வகையான நன்னீர் ஏரியாகும்.
Milne Ice shelf என அழைக்கப்படும் இந்த பனி முகடு ஜூலை 30 அல்லது 31ம் தேதியில் உடைந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
260 அடி தடிமன் கொண்ட துண்டு உடைந்து விழுந்துள்ளது. பனி முகடின் 43% உடைந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலத்தின் மேல் இருக்கும் பனிப்பாறைகளைப் போலன்றி, பனிமுகடுகள் கடலில் மிதக்கின்றன. அவை பொதுவாக நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. Milne Ice shelf உடைவதற்கு முன்பு, வாஷிங்டன் நகரை விட பெரியதாக இருந்தது.
ஆர்க்டிக்கில் வெப்பநிலை வேகமாக உயருகிறது!
ஆர்க்டிக், உலகின் பிற பகுதிகளைவிட மிக வேகமாக வெப்பமடைகிறது. இதற்கு காரணம் polar amplification எனப்படும் ஒரு நிகழ்வு. இது பனி உருகுவதற்கு காரணமாகிறது. இன்று, துருவ பனிக்கட்டிகள் 1990களில் இருந்ததை விட ஆறு மடங்கு வேகமாக உருகிக் கொண்டிருக்கிறது.