பொதுவாக மனிதர்களுக்கு மறதி என்பது இயல்பானது தான். வயதான பிறகு இந்த மறதி என்பது மேலும் அதிகரிக்கும். ஒவ்வொரு நிகழ்வையும் நினைவில் வைத்துகொள்வதில் சிரமம் ஏற்படும். எந்தவொரு விஷயத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப சொன்னாலும் தொடர்ந்து மறந்துகொண்டே இருப்பார்கள். அருகில் இருப்பவர்களின் பெயர், சிறிது நேரத்திற்கு முன் என்ன செய்தோம் , எங்கு இருக்கிறோம், எப்போது சாப்பிட்டோம், என பல அடிப்படையான நிகழ்வுகள் கூட மறந்துவிட்டு நம்மிடம் வாதிடுவார்கள். தங்கள் இளம் வயதில் அனைவருடனும் நன்றாக பேசி பழகியவர்களாக இருந்தாலும் திடீரென அவர்களிடம் இத்தகைய மாற்றம் காணப்படலாம். இந்த மாற்றத்திற்கு பெயர் தான் அல்சைமர் நோய்(Alzheimer).
அல்சைமர் நோய் ஒரு நரம்பியல் சம்பந்தபட்ட நோயாகும். மூளையின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் நியூரான்களின் வேலைசெய்யும் திறன் குறைவது அல்சைமர் நோயின் முக்கிய காரனமாக பார்க்கப்படுகிறது. மூளையில் நினைவுகளை சேமிக்கும் பகுதி பாதிப்பதால் மூளையின் ஆற்றல் குறைகிறது. இதனால் எதையும் உடனடியாக நினைவு கூர்வது முடியாமல் போகிறது. புதிய தகவல்கள் பதிவதும் குறைகிறது. இதுவே அல்சைமர் என்கிறோம்.
தற்போது இதற்கு ஒரு தீர்வை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு புதிய இரத்த பரிசோதனையானது alzheimer நோயுடன் இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் பிரித்தறிந்து நோயினால் தாக்கக் கூடிய அபாயம் இருந்தால் 20 வருடத்திற்கு முன்னரே கண்டறிந்து அவர்களை எச்சரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, அல்சைமர் நோயறிதல் என்பது ஒரு நபர் இறந்தபின், மூளையில் உள்ள அமிலாய்ட் பிளேக்குகள் (Amyloid Plaques ) மற்றும் TAU சிக்கல்களின்(Tau Tangles ) தன்மையை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது. புதிய ஆய்வின்படி, Tau Tangles எனப்படும் புரதங்களில் ஒன்றான p-tau217 ன் அளவீடுகள் மூலம் அல்சைமருக்கான வாய்ப்பை முன்னமே துல்லியமாக யூயூகிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், அமிலாய்டு இரத்த பரிசோதனைகளின் வளர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அல்சைமர் நோயை போக்க இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும் p-tau217 இரத்த பரிசோதனை என்பது தீர்வுகளை எளிதாக்குகிறது. எனவே தான் இந்த ஆராய்ச்சி அல்சைமர் நோய் தீர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது,