நேற்று (04.08.2020) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் செவ்வாய்கிரக குடியேற்றத்திற்கான முயற்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு Star ship எனும் ராக்கெட்டில் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முன்மாதிரியை வெற்றிகரமாக சோதனை செய்து அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். இது ஒரு அடிப்படை மாதிரி வடிவமைப்பு தான். உண்மையான ராக்கெட் இன்னும் பெரிதாக இருக்கும். இதற்கு முன் நடந்த சோதனைகளில் மாதிரி ராக்கெட்டுகள் வெடித்து சிதறின. தொடர் முயற்சிகளுக்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ்
அந்நிறுவனத்தால், செவ்வாய்க்கிழமை பகிரப்பட்ட படங்களில், எஸ்என் 5 என அழைக்கப்படும் சமீபத்திய மாதிரி ராக்கெட், நிலத்தில் தரையிறங்குவதற்கு முன் குறிப்பிட்ட உயரம் எட்டியது. இது ஒரு நல்ல தொடக்கம் என விண்வெளி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். Hop Test என்றழைக்கப்படும் சோதனையில் அந்த ராக்கெட் 150 மீட்டர் (492 அடி) உயரத்தை அடைய திட்டமிடப்பட்டது. வெற்றிகரமாக தரையிறக்கப் பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் குறிப்பிட்டிருக்கும் ஸ்டார்ஷிப் 120 மீட்டர் உயரமும் செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கும் படியும் வடிவமைக்கப்படும்.
இது போல 6 எஞ்சின்கள் அடங்கிய ராக்கெட் 100 பேரை ஏற்றிக்கொண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும். இப்போது அதற்கு முன் மாதிரியாக இந்த சோதனை ஆய்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இரண்டு நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தது ஸ்பேஸ் எக்ஸ். தற்போது செவ்வாய் கிரக பயணத்திற்கான இந்த முயற்சியிலும் வெற்றிபெற்றுள்ளது.