இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது.
இதனால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் (செப்டம்பர் 5) இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று (செம்டம்பர் 6) மாலை தொடங்கியது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக விளையாடினர். இரு வீரர்களும் அரை சதம் அடித்தனர். இவர்கள் இருவரது விக்கெட்டையும் கைப்பற்ற முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர்.
ஆனால், 50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ் இந்திய வீரர் ஷர்துல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். சற்று நிலைத்து நின்ற ஹசீப் ஹமீத் 63 ரன்னில் வெளியேறினார். ஆனால், பிற இங்கிலாந்து வீரர்களான போப் 2 ரன்னிலும், பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஜோ ரூட் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் அவுட் ஆனார். ஜோ ரூட்டிற்கு அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் சார்பில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இங்கிலாந்தின் ஒவல் மைதானத்தில் இந்தியா 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியை ருசித்துள்ளது
இரு அணிகளும் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா பொருத்திருந்து பார்ப்போம்.