இந்திய தடகள சம்மேளனத்தின் நிர்வாகியாக அஞ்சு பாபி ஜார்ஜ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்த குர்கானில் வரும் 31 மற்றும் நவம்பர் 1-ஆம் தேதிகளில் நடக்கிறது. இதில் 31-ஆம் தேதி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.
தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் அடில் சுமரிவாலா மீண்டும் போட்டியிடுகிறார். மூத்த துணைத் தலைவர் பதவிக்கு உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்.
இவர்கள் இருவரையும் எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், சுமரிவாலா 3-வது முறையாக தலைவராகவும், அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக மூத்த துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். பொருளாளர் பதவிக்கு மதுகந்த் பதாக் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவரும் போட்டியின்றி தேர்வாகிறார்.
சந்தீப் மேக்தா, ரவிந்தர் சவுத்ரி ஆகிய இருவரும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். சந்தீப் மேக்தா சீனியர் இணை செயலாளர் பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளார்.