சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணி வீரர் சாம் கர்ரனுக்கு அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் நேற்று முன்தினம் துபாயில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து தோல்வி கண்டது.
இந்த வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறும்போது, “நெருக்கமாக வந்து இந்த வெற்றியை பெற்றுள்ளது சிறப்பானது. சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். எங்களது வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள்.
இதேபோல சுழற்பந்து வீரர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். சாம்கரண் எங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அவரது பவுலிங் அருமையாக இருந்தது. பேட்டிங்கிலும் அவர் கலக்கினார்” என்றார்.
சிஎஸ்கே அணி தனது 9-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வருகிற 17-ம் தேதி ஷார்ஜாவில் சந்திக்க உள்ளது. ஹைதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தாவை 18-ம் தேதி எதிர்கொள்கிறது.




