இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் கபில் தேவ். இவருக்கு வயது 62. 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்தவர், கபில் தேவ்.
கபில் தேவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கபில் தேவுக்கு AngioPlasty செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மருத்துவர்கள் கூறும்போது, கபில் தேவ் தற்போது உடல்நலத்துடன் ஐ.சி.யு.வில் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
கபில் தேவ் உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த பல வீரர்களும், அவரது ரசிகர்களும், அவர் குணமடையவேண்டி பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி தனது டுவிட்டர் பதிவில், உங்கள் விரைவான மீட்புக்காக பிரார்த்தனை செய்கிறேன். சீக்கிரம் நலம் பெறுங்கள் பாஜி என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளிலும், 5131 ரன்களையும், 225 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களையும் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 253 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 434 விக்கெட்டுகளையும் கபில்தேவ் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் எனும் பெருமை கபில் தேவுக்கு மட்டுமே உண்டு.




