தவானின் அதிரடி சதத்தால் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து சென்னை அணி சார்பில் டு பிளிசி அரைசதம் அடித்து அசத்த,கடைசி நேரத்தில் ஜடேஜா,ராயுடுவின் அதிரடியால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக சென்னை அணி வழங்கியது.
180 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி சார்பில் தொடக்க வீரர்களாக தவான்,பிரித்திவி சா களம் இறங்கினர்.பிரித்திவி சா முதல் ஓவரிலேயே அவுட் ஆகி நடையைக்கட்ட, அடுத்து வந்த ரஹானே 8 ரன்களில் வெளியேறினார்.ஒரு முனையில் தவான் அதிரடியாய் அடித்து ஆட,மறுமுனையில் தட்டி கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்(23 ரன்கள்,23 பந்துகள்) பிராவோ வீசிய 12 வது ஓவரில் டு பிளிசியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடித்து ஆடிய தவான் 29 பந்துகளில் அரைசதத்தை கடக்க,ஸ்டொய்னிஸ் தன் பங்கிற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு கொண்டு இருந்தார்.
சர்துல் வீசிய 16 ஓவரில் ஸ்டொய்னிஸ்(24 ரன்கள்,14 பந்துகள்) தூக்கி அடிக்க பார்த்து ராயுடுவிடம் கேட்ச் ஆனார்.16 ஓவர் வீசிய சாம் கர்ர்ன் பந்தில் தவான் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை தெறிக்கவிட,டெல்லி அணிக்கு 12 பந்துகளில் 21 ரன்கள் தேவையாக இருந்தது.அடுத்த ஓவரில் அலெக்ஸ் கேரி(4 ரன்கள்,7 பந்துகள்) முதல் பந்தே அவுட் ஆக,தவான் சிறப்பாக விளையாடி 57 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஜடேஜா பந்து வீச வந்தார்.அக்சார் அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு கலக்க டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணிக்கு எதிராக சதம் அடித்து டெல்லியை வெற்றிபெற செய்த தவானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 2020 ஐ.பி.எல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கண்டிப்பாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று இருப்பது அவசியம்.ஆனால் சென்னை ஏற்கனவே 6 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளதால் மீதம் உள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட ரன் ரேட் அடிப்படையில் மிக மோசமான நிலையில் இருக்கிறது.எனவே சென்னையின் பிளே ஆப் கனவு வெறும் கனவாகவே கலைந்து விட்டது.




