காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும், இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியா 3 தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற நிலையில் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. இதன்மூலம் 2 வெள்ளி பதக்கங்கள் உறுதியாயின.
பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சாத்விக் சாய்ராஜ் ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-12 என்ற கணக்கிலும், பி.வி.சிந்து 21-11, 21-12 என்ற கணக்கிலும் லக்சியா சென் 21-18, 21-15 என்ற கணக்கிலும் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தனர். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொள்கிறது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் அரையிறுதி போட்டியில் நைஜீரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்திய ஆக்கி அணி 3வது போட்டியில் நாளை கனடாவை சந்திக்கிறது.பெண்கள் ஆக்கிப் போட்டியில் இன்று மாலை இங்கிலாந்துடன் மோதுகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிப்பெற்ற நிலையில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.