பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு எதிராக அசத்தல் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் இன்றைய இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
ஐசிசி T20 உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். நான்காவது பந்தில் ரோஹித் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து மூன்றாவது ஓவரில் கே.எல்.ராகுல் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் 6 ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் விக்கெட்டைபறிகொடுக்க இதனால், இந்திய அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்து தடுமாறியது. ரிஷப் பண்ட் , விராட் கோலி கூட்டணி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயத்தினர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 35 , விராட் கோலி 57 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி 3, ஹசன் அலி 2, ஷதாப் கான், ஹாரிஸ் ரவுப் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 152 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் விளாசினர். கடைசிவரை முகமது ரிஸ்வான் 79*, பாபர் ஆஸம் 68 * ரன் எடுத்து களத்தில் நின்றனர்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் எதுவும் இழக்காமல் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் முறையாக டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இடையே உள்ள ஸ்போர்ட்மென்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.