இந்தியாவை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க ரூ. 1 கோடியை நன்கொடையாக சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு முதல் மாநில அரசுகள் வரை திணறி வருகின்றனர். மேலும், பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க ரூ. 1 கோடியை நன்கொடையாக சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான தீவிர கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது.
நான் விளையாடும் போது நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது. அது எனக்கு வெற்றிபெற உதவியது. அதேபோல், இன்று இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் பின்னால் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். எனவே, மிஷன் ஆக்சிஜனுடன் இணைந்து 1 கோடி வழங்கி இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை கொரோனா தொற்றில் இருந்து மீட்போம் என்று தெரிவித்துள்ளார்.