ஐ.பி.எல் 2020 தொடரில் இருந்து புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா ஒரே நாளில் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
துபாய்:
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தன் கடைசி ஓவரில் ஒரு பந்து மட்டுமே வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார் புவனேஸ்வர் குமார். அவருக்கு இதற்கு முன் பல முறை காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அது போலவே இப்போதும் அவர் மீண்டு வருவார் என கருதப்பட்டது.
ஆனால், இப்போது புவனேஸ்வர் குமார் முற்றிலுமாக மீதமுள்ள ஐ.பி.எல் 2020 தொடரில் இருந்தே விலகி உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதன்மை பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன் முதல் ஓவரிலேயே விரலில் காயம் அடைந்தார். பீல்டிங் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.அந்தப் போட்டியில் அவர் 2 ஓவர்களில் 14 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதன் பின் அவர் பந்து வீசவில்லை. இந்த நிலையில் அவர் காயம் மோசமாக இருப்பதால் அவர் ஐ.பி.எல் 2020 தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இவர்கள் இருவரும் விலகியது டெல்லி,ஹைதராபாத் அணிக்கு மிக பெரிய இழப்பாக கருதப்படுகிறது.