ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி 126 ரன்களுக்கு சுருண்டது.
பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின. துபாயில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் சார்பில் கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மந்தீப் சிங் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் பொறுபோடன் ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். மந்தீப் சிங் 17 ரன்களில் சந்தீப் பந்துவீச்சில் வெளியேற, கே.எல்.ராகுல் 27 ரன்கள் எடுத்து இருந்தபோது ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கெயிலும் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இந்த தொடரில் பெரிதும் சோபிக்காத மேக்ஸ்வெல் 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நிக்கோலஸ் பூரான் 32 ரன்களை குவித்தார். இதன்மூலம், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷீத்கான் மற்றும் சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.