ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக தாமதமாகி, கடந்த 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடடில் முதல் போட்டியாக மும்பை அணியை சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இன்று நடைபெற உள்ள தொடரின் நான்காவது லீக் போட்டியில், 3 முறை சாம்பியன் ஆன சென்னை அணி, இதுவரை 1 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள ராஜஸ்தான் அணியாக எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 14 முறையும் , ராஜஸ்தான் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் , விஜய் சொதப்பினாலும், மற்ற அனைவருமே சிறப்பாக ஆடினர். தோனி, அனுபவம் மிக்க வீரர்களை எப்போதும் அதிகம் நம்புவதால், அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் பிராவோ இந்த போட்டியிலும் விளையாட மாட்டார் என் எதிர்பார்க்கப்படுகிறது. நிகிடி, சாம் குர்ரன், சாஹர் ஆகியோர் பந்துவீச்சில் சென்னை அணிக்கு பலமாக உள்ளனர்.
அதேநேரம், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. அதிரடி ஆட்டக்காரர்களான பட்லர் , ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. இதனால், ஸ்மித் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , டேவிட் மில்லர் ஆகியோருடன் உத்தப்பா, சஞ்சு சாம்சன் ஆகியோரையே ராஜஸ்தான் அதிகம் நம்பி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சரியான கலவையுடன் அமைந்துள்ள சென்னை அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உள்ளதாக கூறப்பட்டாலும், வெற்றிக்காக ராஜஸ்தான் அணி மிக கடுமையாக போராடி முழு திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.