ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
துபாயில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும், 12வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த சென்னை அணி, ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் இன்றைய லீக் போட்டியில், டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதலிடத்திலும், 3 வெற்றிகளுடன் பஞ்சாப் 7வது இடத்திலும் உள்ளது.
டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க பஞ்சாப் அணிக்கு இப்போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாக உள்ளது. முன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பஞ்சாப் அணி, அதிரடி வீரர் கெயிலின் வருகைக்குப் பிறகு கடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கெயில் ஆகியோரை நம்பியே அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் உள்ளது.
மேலே குறிப்பிட்ட வீரர்களின் அதிரடி பேட்டிங் உடன், ஷமி மற்றும் ஜோர்டனின் சிறப்பான பந்துவீச்சு மும்பை அணிக்கு எதிரான போட்டியாக வெற்றியை பெற்று தந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் பஞ்சாப் அணியில் நீடிக்க முடியும் என்பதால், வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. தோல்வியுற்றால் சென்னை அணிக்கு துணையாக நடப்பு தொடரில் பஞ்சாப் அணி லீக் உடன் நடையை கட்ட வேண்டியது தான்.
டெல்லியை பொருத்தவரையில் நடப்பு தொடரில், கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணியாக மாறியுள்ளது. தவானின் சிறப்பான பேட்டிங் பார்ம் அணிக்கு பலமாக உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர், பிருத்வி ஷா, ஸ்டோயனிஷ், அக்சர் படேல் ஆகியோரும் சிறப்பான பார்மில் உள்ளனர்.
பந்துவீச்சில் ரபாடா, நோர்ட்ஜே, அஸ்வின், அக்சர் படேல் போன்றோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அனைத்து விதத்திலும் வலுவாக உள்ள இந்த அணியை வெல்ல, பஞ்சாப் அணி கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.