துபாய் கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 115 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதனால் 116 எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டியது கொல்கத்தா. இருந்தாலும் ஐந்தாவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர். தொடர்ந்து வந்த திரிபாதியும் 7 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் வந்த நித்திஷ் ராணாவுடன் இணைந்து 55 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் சுப்மன் கில். ஹைதராபாத் அணி மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது. அதனையும் தாக்குப்பிடித்து நிதானமாக விளையாடிய சுப்மன் கில், 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்த இன்னிங்ஸில் நடப்பு சீசனின் முதல் அரை சதத்தை பதிவு செய்தார் அவர்.
வெற்றிக்கு பத்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ராணா 33 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். முடிவில் கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதை உறுதி படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




