கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி சிறப்பாக பந்து வீசி 48 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் எதிரான இன்றைய ஐ.பி.எல் 13 வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை இலக்காக வழங்கியது.192 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி முதல் நான்கு ஓவர் வரை சிறப்பான தொடக்கம் தந்தனர் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அகர்வால்.அடித்து ஆடி கொண்டிருந்த அகர்வால்(25ரன்கள்,18 பந்துகள்) பும்ரா வீசிய 4.5 வது பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேற,அடுத்து வந்த கருண் நாயரும் ரன் எண்ணிக்கையை தொடங்காமல் குர்னால் பாண்டியா பந்தில் போல்ட் ஆகி நடையை கட்டினார்.
அடிப்பார் என்று எதிர்பார்த்த கேப்டன் கே.எல்.ராகுலும்(17ரன்கள்,19 பந்துகள்) 9 வது ஓவர் வீசிய ராகுல்சாகர் பந்தில் வெளியேற, பஞ்சாப் அணி 3 விக்கெட்களை இழந்து 60 ரன்களுடன் தடுமாறியது.அடுத்து வந்த மேக்ஸ்வல்,நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினர்.மேக்ஸ்வல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த,பூரன் மறுமுனையில் அடித்து ஆட, பஞ்சாப் அணி 13.1 வது பந்தில் 100 ரன்களை கடந்தது.பாட்டிசன் போட்ட அதே ஓவரில் பூரன்(44 ரன்கள்,27 பந்துகள்) விக்கெட் கீப்பர் டி காக்கிடம் தன் விக்கெட்டை இழந்தார்.ராகுல் சஹார் வீசிய 15 வது ஓவரில் மேக்ஸ்வல்(11 ரன்கள்,18 பந்துகள் )போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.பும்ரா போட்ட அடுத்த ஓவரில் ஜிம்மி நீசம் 7 ரன்களுடன் நடையை கட்ட,பஞ்சாப் அணி 6 விக்கெட் இழந்து 116 ரன்களுடன் தடுமாறியது.
17 வது ஓவரில் சர்ப்ராஜ் கான் பாட்டிசன் வெளியேற,12 பந்துகளில் 69 ரன்கள் பஞ்சாப் அணிக்கு தேவையாக இருந்தது.போல்ட் வீசிய 18.3 வது ஓவரில் ரவி பிஸ்னோய் சூரிய குமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து வெளியேற,அதே ஓவரில் கெளதம் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்தார்.பும்ரா பந்திலும் கெளதம் ஒரு பௌண்டரி அடிக்க, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடி மும்பை அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்திய பொல்லார்ட்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.