உலக அரங்கில் ஹாக்கி போட்டியில் இந்தியா தனி சிறப்பு பெற்று விளங்கியதற்கு காரணம் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சிங் தான்.
1928-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்ஸில் தயான் சந்த் சிங் தான் விளையாடிய 5 போட்டிகளில் 14 கோல் அடித்து அசத்தினார். 1932-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் விளையாடி தங்கத்தை பெற்றுத் தந்தார். 1936-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் ஜெர்மன் பெர்லினில் நடந்தது. அப்போது, இந்தியாவின் கேப்டனாக இருந்த தயான் சந்த் சிங், ஜெர்மனியை 8 கோல் கணக்கில் வீழ்த்தினார். ஹாக்கியில் சிறந்து விளங்கிய அவருக்கு 1956-ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. தயான் சந்த் சிங்கை ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என்றே அழைத்து வந்தனர். மேலும், 1928-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 400கோல்கள் அடித்துள்ளார்.
இத்தகைய பெருமைகளை இந்தியாவிற்கு பெற்று தந்த சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 ல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.
மேலும் இவரது புகழை போற்றும் வகையில், லண்டன் ஜிம்கானா கிளப் ஹாக்கி மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. 2012-ல் இவரது உருவம் பொறித்த தபால்தலையை வெளியிட்டது இந்திய அரசு. டெல்லியில் தயான் சந்த் பெயரில் தேசிய விளையாட்டு அரங்கம், உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிர்குரி மலையில் சிலை என அவர் கவுரவிக்கப்பட்டுள்ளார். தயான் சந்த் பெயராலேயே தேசிய விருதுகளும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.