உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில் “எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகின் தலைசிறந்த மின்னல் வேக ஓட்டப்பந்தைய வீரரும், 8 முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா நாட்டைச் சார்ந்த உசைன் போல்ட் கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை அந்நாட்டு சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் 21-ஆம் தேதி, உசைன் போல்ட் தனது 34ஆவது பிறந்தநாளை மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடினார். அதில் பல நட்சத்திர வீரர்களும் கலந்துக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின்பு, அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்று பரிதோசனை மேற்கொண்ட அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாக முடியும். சுவாசப் பிரச்சனை மட்டுமே இருந்ததாகவும், வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், எனது 34-வது பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடினேன், இது எனது வாழ்நாளில் மறக்கமுடியாத பிறந்தநாள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உசேன் போல்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும், உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.




