பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோற்றதற்கு காரணம் பந்து வீச்சாளர் முகமது ஷமி என ஒரு சாரர் குற்றச்சாட்டு வைத்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 24ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்ததே இல்லை என்பதால் அன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் வீரர்கள் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒருசாரர் ஒருபடி மேலே போய் இந்திய பந்து வீச்சாளார் முகமது சமிதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் அவர் இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக பந்து வீசி அவர்களை வெற்றி பெற வைத்து விட்டார் என அவர் மீது மத ரீதியிலான விமர்சனம் வைத்தனர். இதற்கு இந்திய அணியின் முன்னணி விளையாட்டு வீரர்கள் கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் ஷமிக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், முகம்மது ஷமி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இவர்கள் அனைவரும் வெறுப்புத்தன்மையால் நிறைந்தவர்கள். அவர்களுக்கு யாரும் அன்பை தரவில்லை. அவர்களை மன்னியுங்கள்” என தெரிவித்துள்ளார்.