விராட் கோலியும் மனிதர் தான், அவர் ஒன்றும் மெஷின் அல்ல என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர் என்று கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த சில போட்டிகளில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் சொற்பமான ரன்களை மட்டுமே எடுத்தார். ஐதராபாத்திற்கு எதிரான போட்டியின் 14 ரன்களை எடுத்த கோலி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். மேலும், சில கேட்ச்களையும் கோலி தவறவிட்டார்.
விராட் கோலியின் தற்காலிக பேட்டிங் தடுமாற்றம் குறித்து கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மைதானத்தில் உங்களுக்கு நல்ல நாட்களும் இருக்கும், மோசமான நாட்களும் இருக்கும். இது ஒவ்வொரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையிலும் ஒரு பகுதி. கோலி ஒரு மனிதர் தான்.. அவர் ஒன்றும் மெஷின் அல்ல… என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர். நீங்கள் மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நேரமும் வெற்றியடையமாட்டீர்கள். கோலி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை அவரது ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தற்போது அவர் ஒரே ஒரு போட்டியில் மோசமாக விளையாடினாலும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது என்று அவர் கூறினார்.




