காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பிற்கு சிகிச்சை பெற, ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு வந்தடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள், டீ20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது. இதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 11ந்தேதி இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.
ஆனால், ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் அணியில் மட்டும் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, மனைவி அனுஸ்காவிற்கு பிரசவம் ஏற்பட உள்ளதால், விராட் கோலி டெஸ்ட் தொடரின் பாதியிலேயே இந்தியா திரும்ப உள்ளதால், ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்புவது அவசியமாக உள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இன்று காலை வந்தடைந்து உள்ளார். இங்கு அவர் 100 சதவீதம் குணமடைவதற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்படும்.
இதேபோன்று பி.சி.சி.ஐ. மருத்துவ குழுவும் ரோகித்தின் உடற்தகுதியை கண்காணிக்கும். அதுபற்றி அனைத்து இந்திய மூத்த தேர்வு குழுவுக்கும் விளக்கம் அளிக்கும் என பி.சி.சி.ஐ. அறிக்கை தெரிவித்திருந்தது.