இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 10 மாதமே பூர்த்தியடைந்துள்ள மகளுக்கு விடுக்கப்பட்ட பாலியல் அச்சுறுத்தல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமிதான் காரணம் என அவரது சமூகத்தையும் மதத்தையும் சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் தொடர் அவதூறுகள் பரப்பப்பட்டன.
இந்த அவதூறுகள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி பாகிஸ்தானுடன் ஷமியை ஒப்பிட்டு பேசும் அளவு சென்றன. இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர், கோலி உள்ளிட்டோர் ஷமிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து கோலியின் – அனுஷ்கா சர்மாவின் 10 மாதம் கூட வயது நிரம்பாத மகளுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து டெல்லி காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸில் “கோலியின் மகள் மீதான அச்சுறுத்தல்கள் குறுத்து நாம் வெட்கப்பட வேண்டும், இந்த அச்சுறுத்தல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என காவல்துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும்.” என டெல்லி மகளிர் ஆணை தலைவர் ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறைக்கு கோரியுள்ளார்.
முன்னதாக ஷமிக்கு ஆதரவாக பதிவிட்டிருந்த கோலி, “மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சிப்பது என்பது மோசமான செயல்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.