சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மீண்டும் வரவேண்டும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்தார்.

உலகின் மிகச் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் 2018-ல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியுறச் செய்தது.
ஆனாலும் டி20 போட்டிகள், ஐபிஎல் போட்டிகளில் டிவில்லியர்ஸ் ஆடி வருகிறார். 36 வயதான டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அவர் அதிரடியாக விளையாடி வெற்றி தேடித் தந்தார்.அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தை கேப்டன் விராட் கோலி பாராட்டி இருந்தார்.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, “கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்ஸின் ஆட்டம் அற்புதமாகவும், அதிசயமாகவும் அமைந்தது. இதை பார்க்கும்போது கனவா? நினைவா? என்றே எண்ணத் தோன்றியது.
இதனால் நீங்கள் (டிவில்லியர்ஸ்) ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட வாருங்கள்” என்றார்.




