பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மற்றும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் முதல் நிலை வீரரான செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச்-ம், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ்-ம் மோதினர். யார் ஃபைனலுக்குச் செல்வார்கள் என்ற பரபரப்பான போட்டியில், ஜோகோவிச் 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
எனவே, இறுதிப் போட்டியில் ஜோகோவிச், ரஃபேல் நடாலை சந்திக்க உள்ளார். இதன் மூலம் நோவக் ஜோகோவிச் 5-வது ரோலண்ட் கரோஸ் இறுதி மற்றும், 27-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடால்-க்கும் இது 13-வது ரோலண்ட் கரோஸ் இறுதிப் போட்டியாகும். இவர் அரை இறுதியில் 6-3, 6-3, 7-6 (0) என்ற கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை வென்றார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள போட்டியில், இரு முன்னனி வீரர்களுக்கும் இடையேயான பலப்பரீட்சையில், யார் கோப்பையை வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி என்பது தெரியவரும். மேலும், இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனவும், இப்போட்டியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.