7ஆம் ஆண்டு அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவின் பாதுகாப்பு துறை இவரின் காலகட்டத்தில்தான் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டது. (குறிப்பாக, அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குதல் & போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான செயற்கைகாள் வடிவமைப்பு)
மாணவர்களின் எழுச்சிநாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனுமாக இருந்து வரும் ஐயா அப்துல்கலாம், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மாணவர்களின் மூலமே இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியும் என உறுதியாக நம்பினார். 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் இந்திய இளைஞர்கள் & மாணவர்களை உலுக்கியது. ஏன், இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது என்று சொல்லலாம்.
அவரது உடல், அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சி மடத்தில் ’பேய்க்கரும்பு’ என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அவரது நினைவை போற்றும் வகையில் மத்திய அரசு மணிமண்டபம் அமைத்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் இன்றும் அவரது சமாதிக்கு சென்று வராமல் இருப்பதில்லை. இந்நிலையில், அவரின் நினைவு நாளான இன்று, அவரின் குடும்பத்தினர் அப்துல் கலாமின் சமாதிக்கு வந்து சிறப்பு தொழுகை நடத்தினர். பின், முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கனவு காணுங்கள்’
கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுவே கனவு – அப்துல் கலாம்.
-பா.ஈ.பரசுராமன்.




