அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள Mrs International world Classic – 2022உலக அழகிப்போட்டிக்கு, சென்னையை சேர்ந்த பிரபல மனநல நிபுணர் Dr.பிளாரன்ஸ் நளினி தேர்வாகியுள்ளார்.
ஆண்டுதோறும் திருமதி இந்தியா உலக அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘திருமதி இந்தியா’ அழகி போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற மிஸஸ் இந்தியா போட்டியில், சென்னையை சேர்ந்த சைக்காலஜி நிபுணர் பிளாரன்ஸ் நளினி, “Ms International World Classic India 2021″ என்ற பட்டத்தை வென்றார். இத்துடன் ” Glamorous Achiever ” என்ற பட்டத்தையும் தட்டி வந்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மிஸஸ் உலக அழகி போட்டியில் இவர் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளார்.
பொதுவாக இது போன்ற உலக அழகிப் போட்டிக்கு போகும் பெண்கள், அவர்களை ஒவ்வொரு படியாக வளர்த்து கொள்வார்கள். ஆனால் மிஸஸ் தமிழ்நாடு போட்டியில் கலந்துக்கொள்ளாமலே நேரிடையாக மிஸஸ் இந்தியா போட்டியில் கலந்துக்கொண்டது மட்டுமின்றி, முதல் போட்டியே உலக அளவில் இவருக்கு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
கல்வி,கலை, மனநல நிபுணர், பிஸினஸ், அழகிப்போட்டி என இவர் கால் பதிக்காத துறைகளே இல்லை. பயணமே தன்னை செதுக்கியதாக கூறும் Dr.பிளாரன்ஸ் நளினி, கொரோனா பாதிப்பின் போது ஏற்பட்ட நிமோனியாவால் மரணத்தின் வாசலை தொட்டு பார்த்து, மீண்டு வந்துள்ளார். கற்கும் ஆர்வம் இருக்கும் வரை இந்த வானமே எல்லை எனும் மிஸஸ் இந்தியாவின் எனர்ஜி டானிக் அவரது கணவர் சீனிவாஸ், மகள்கள் ஸ்ரேயா, சரிகா மற்றும் தம்பி யாத்தி ராஜ் தானாம். இத்துடன் பெற்றோரின் ஆசிர்வாதமே பிரதானம் என்கிறார், டாக்டர் நளினி
மருத்துவம் படித்து வரும் மகள் வற்புறுத்தலின் பேரில் போட்டிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்ததாக சொல்லும், பிளாரன்ஸ் நளினி தேடி தேடி கற்கும் ஆர்வமே இந்தளவுக்கு தனக்கு வெற்றியை தேடி தந்ததாக நெகிழ்கிறார். தன்னை தானே செதுக்கி கொள்வதுடன், தன்னை போன்ற பெண்கள் வெளி உலகத்தை அறியவும் உதவி வருகிறார். நம்பிக்கை தெறிக்க பேசும் பிளாரன்ஸ் நளினி, மிஸஸ் உலக அழகிப்போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள்.