ஒரு ராக்கெட் தயாரிக்கச் செலவிடும் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான தொகையை இந்திய அரசு சக மனிதன் மீதான அக்கறையாகச் செலுத்தினாலே போதும், மனித உதவி இல்லாமல் நவீன வசதிகள் கொண்ட கழிவு அள்ளும் கருவிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம்.
சென்னை பட்டினப்பாக்கம் நிர்மலா சீனிவாசபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சினிவாசபுரத்தில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் சயின் ஷா ஈடுபட்டிருந்த நிலையில் தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டதால் அவர் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றச் சென்ற நாகராஜ் அவ்விடத்தில் மயங்கி விழுந்தார். இந்நிலையில் கழிவுநீர் தொட்டியில் இருந்த இருவரையும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
இதே போன்று, கடந்த ஜூலை 2ந் தேதி தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடியில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலா, தினேஷ், பாண்டி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
முதலில் தொட்டிக்குள் இறங்கி இசக்கி ராஜாவும், பாலாவும் சுத்தம் செய்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த தினேஷ், இருவரையும் அழைத்தபடியே தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரும் வெளியில் வராததால் பாண்டியும் உள்ளே இறங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களும் வெளியே வராததால் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி உயிரற்ற நான்கு உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பிறகு, அவர்களது உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக, அமரர் ஊர்தியை வரவழைக்காமல், டிராக்டரில் எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தை முன்வைத்து சில கேள்விகள் எழுந்தன. பாதுகாப்புக் கவசம் மட்டும்தான் காரணமா, இந்தவகை மரணங்கள் ஏன் தொடர்கின்றன. இறந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்குமா, ஏற்கெனவே அதுபோன்று கிடைத்திருக்கிறதா, கையால் கழிவுகளை அள்ளும் அவலத்தைத் தடுத்து, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண நாம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் போன்றவை குறித்து தெரிந்துகொள்ள, இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள் குறித்துப் பேசிவரும் வழக்கறிஞர் முகமது முஸ்தாக்யூம் ராஜாவிடம் பேசினோம்.

“பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் உயிரிழக்கிறார்கள்’ என நாம் காரணம் கூறுவது, இந்த காரணத்துக்குப் பின்னால் பதுங்கியிருக்கும் சமூக அவலத்தில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறைக்கும் ஒரு போக்குதான். உபகரணங்கள் இருக்கிறதோ, இல்லையோ மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. மனிதாபிமான அடிப்படையில் இதைச் சொல்கிறேன் என்பதைத் தாண்டி சட்டபூர்வமாகவும் இது தவறானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன்படி, கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமை இருக்கிறது. அந்த உரிமையை சக மனிதனுக்குக் கொடுக்காமல் மனிதக் கழிவுகளை மனிதனையே அள்ளச் சொல்கிறோம். இது எந்தவகையில் நியாயம், என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…
“இந்தத் தொழில்முறையைத் தடுக்க அரசாங்கம் எந்தச் செயல்திட்டங்களும் கொண்டுவரவில்லையா?”
“கையால் மலம் அள்ளும் தொழில் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மாற்று வேலை கொடுக்கும் திட்டம் இருக்கிறது. அவர்களுக்கு லோன் கொடுத்து வேறுவேலை செய்ய ஊக்கப்படுத்துவது, அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது ஆகிய திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் வெறும் திட்டம் என்கிற அளவிலேயே அவை இருக்கின்றன. இத்தகைய தொழிலையே அரசாங்கம் ஒழிக்க வேண்டுமென்பதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். மேலும் இதற்கு ஒரேவழி கழிவுகளை அள்ளுவதற்கு அதிநவீன உபகரணங்களைத் தயாரிப்பதுதான்”.
“அதுபோன்ற உபகரணங்கள் தயாரிக்கும் பணியில் இந்திய அரசு செயல்பாடு எப்படியுள்ளது?”
“பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் ரோபா ஒன்றை கேரள இளைஞர் ஒருவர் தயாரித்தார். அது ஒரு அடிப்படையான கருவி.எல்லாவிதமான கழிவுகளையும், அடைப்புகளையும் துப்புரவு செய்யக்கூடிய இயந்திரம் அல்ல. அரசாங்கம் இதில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும். ஆனால், அதிகாரவர்க்கங்களைப் பொறுத்தவரை இந்த வேலையைச் செய்வதற்குத்தான் குறிப்பிட்ட மக்கள் இருக்கிறார்களே நமக்கு என்ன இருக்கிறது? தொழிலாளர்கள் உயிரிழந்தால் இழப்பீடு கொடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். இந்த அலட்சியம்தான் இவ்வகை மரணங்கள் தொடர்வதற்குக் காரணம்”.

“இதற்கு என்ன தீர்வு?”.
“இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதென்பது தற்காலிகத் தீர்வுதான். அதுவும் பல குடும்பங்களுக்கு முறையாகப் போய்ச் சேர்வதில்லை. ஆக, நிரந்தரத்தீர்வு என்பது உபகரணங்கள் தயாரிப்பது மட்டுமே. ஐ.ஐ.டி. போன்ற தொழிற்கூடங்கள் எல்லாம் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. Sanitary engineering என்கிற துறையே இந்தியாவில் பரவலாகவில்லை. அது ஏன் அவசியம் என்கிற புரிதல்கூட இங்கு யாருக்கும் கிடையாது. இதுகுறித்த புரிதலும், தெளிவும் இல்லாதவரை இன்னும் பல தொழிலாளர்கள் இறந்துகொண்டுதான் இருப்பார்கள். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கியே நாம் சிந்திக்க வேண்டும். ராணுவத் தடவாளங்கள் இல்லாமல், போர்க்கருவிகள் இல்லாமல், வெறுங்கையுடன் ராணுவ வீரர்கள் எல்லையில் சும்மா போய் நின்றால் நாடு அதை அமைதியாக விட்டுவிடுமா? அறுவை சிகிச்சைக் கருவிகளே இல்லாமல் வெறுங்கையுடன் மருத்துவர்களும், மருத்துவமனையும் இயங்க பொதுச்சமூகம் அனுமதிக்குமா? மக்கள் எப்படிக் கொதித்து எழுவார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட மக்கள் காலங்காலமாக இப்படி அல்லல்படுகிறார்களே அதுபற்றி நாம் கவலைப்பட்டது உண்டா? பொதுச்சமூகம் ஏன் அமைதியாக இருக்கிறது? விஷவாயு தாக்கி ஒரு தொழிலாளி இறந்தார் என்பதை ஒரு செய்தியாக நாம் கடந்துபோகும்வரை மலக்குழியில் மரணிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இன்னும் எவ்வளவு நாள்கள்தான் இந்த மரணங்களுக்கு ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பது? சொல்லுங்கள்…”

கழிவுநீர் மற்றும் மனிதக்கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் இந்த தீர்ப்பு உத்தரவு வெளியான பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாடெங்கும் 1,370 தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது விஷவாயு தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் 26 பேருக்கு மட்டுமே நட்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் வெறும் 8 பேருக்கு மட்டும்தான் பத்து இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு அளிக்கப்பட்டுள்ளது என்றார், ஆதங்கத்துடன்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் கழிவுநீர் அகற்றும்போது 376 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 15 பேர் உயிரிழந்ததாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.

அனைத்து மாநில அரசுகளுமே உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதில் அலட்சியமாக நடந்து வருகின்றன. மனித மலத்தை மனிதனைச் சுமக்க வைக்கும் அநாகரிகத்தை இன்னமும் அனுமதித்துக் கொண்டே, நாட்டின் வளர்ச்சி குறித்து, அறிவியல் சாதனைகள் குறித்துப் பீற்றிக் கொள்வது அருவருக்கத்தக்க வெட்கக்கேடு. சாக்கடை, மலக்குழி அடைப்புகளைச் சுத்தம் செய்வதை இயந்திரமயமாக்குவதன் மூலம் இந்த சாதிரீதியான அடிமைத் தொழிலை ஒழித்துக் கட்டிவிட முடியும். அனைத்திற்கும் மேலாக, அரசு இந்த அநாகரிகமான அடிமைத் தொழிலைத் தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்துவதைத் தீண்டாமைக் குற்றமாகப் பார்க்க மறுப்பதோடு, இந்த இழிதொழிலை ஒழித்துக் கட்டப் போவதாக அறிவித்துக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கழிப்பறை காகிதமாக்கி வீசுகிறது.





