‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ என காடுவெளி சித்தர் பாடல் தமிழகத்தில் பிரபலம். ஒரு ஆண்டி குயவனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டு ஒரு தோண்டி (மண்சட்டி) வாங்கி வந்துள்ளான். அதை எப்படி கையாளணும் என்று தெரியாமல் தோண்டி கிடைத்த சந்தோஷத்தில் தலையில் வைத்து கூத்தாட அது கீழே விழுந்து உடைந்து போனது.
இங்கே தோண்டி என அதிமுகவைச் சொல்லலாம். குயவன் என எம்ஜிஆரை சொல்லலாம், அந்த தோண்டியை இன்னும் சிறப்பாக செய்து கொடுத்ததாக இன்னொரு குயவனாக ஜெயலலிதாவையும் சொல்லலாம். தோண்டியை வாங்கின ஆண்டி ஒருவரல்ல பலர். பல ஆண்டிகள் ஒரு தோண்டியை வைத்து அதை எவ்வாறு கையாளணும் என்று தெரியாமல் கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஆட்டத்தில் தோண்டி உடைந்தால்….மீண்டும் செய்ய ஒரு எம்ஜிஆர், ஜெயலலிதா போல் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் இல்லை. இதுதான் இன்றைய நிலை. இந்த கட்டுரையின் தலைப்பை படித்தப்பின் கீழே செல்லவும். உங்களுக்காக இன்னொரு கதையும் உள்ளது. அதை இன்னும் கீழே சென்றவுடன் சொல்கிறேன் நீங்களே அட ஆமால்ல என்று ஒப்புக்கொள்வீர்கள்.
இப்ப பழைய சங்கதிகளை திரும்பிப்பார்ப்போம். பழைய அரசியலைப்பற்றி அறியாத 90 கே, 2 கே கிட்ஸ் வாக்காளர்கள் தான் அதிகம். அவர்களுக்கு சில பழைய வரலாறுகளைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தேசிய கட்சிகளுக்கு எப்போதும் மாநிலக்கட்சிகள் மீது ஒரு கண். தன்னால் மாநிலத்தில் கால் பதிக்க அவைகள் தடையாக உள்ளதே என்கிற கோபம்தான். இப்படித்தான் 1967-ல் தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட காங்கிரஸுக்கும் திமுக மீது கோபம் இருந்தது.
ஆனால் துரதிர்ஸ்டவசமாக காங்கிரஸே அகில இந்திய அளவில் இரண்டாக உடைந்தது, இந்திரா தலைமையில் ஒரு காங்கிரஸும், காமராஜர் உள்ளிட்டோர் தலைமையில் பழைய காங்கிரஸும் உருவானது. இந்திரா தலைமையிலான காங்கிரஸை கருணாநிதி வாரி அணைத்தார். உடன் எம்ஜிஆரும் இருந்ததால் 1971 தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் நடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
வெற்றி பெற்ற இந்திரா பிரதமரானார். மிகப்பிரம்மாண்ட வெற்றியைப்பெற்று எதிர்க்கட்சிகளே பெரிய அளவில் இல்லாத தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி அமர்ந்தார். சில ஆண்டுகள் தான். மத்திய அரசுக்கு மூக்கில் வேர்த்தது. திமுக எனும் மாநிலக்கட்சி பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறது அது இருக்கும்வரை தமிழகத்தில் காங்கிரஸ் காலூன்ற முடியாது என முடிவு செய்தது. திமுகவில் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் பூசல் வளர்ந்தது.
ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். ஒரு பிரபல முன்னணி நடிகர் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லாத நிலையில், அவருக்கு துணை நின்றது மத்திய அரசு. எம்ஜிஆரின் ஆதரவாளர்களும் கட்சி ஆரம்பிக்கச் சொல்ல 1973 அக்டோபரில் அதிமுக எனும் இயக்கம் உருவானது. இதில் என்ன நகைச்சுவை என்றால் 1971 கூட்டணியில் இருந்த திமுகவை அழிக்க அதிமுகவுக்கு உதவிகள் செய்தது மத்திய அரசு.
திமுக இருக்காது என்று நினைத்த நேரத்தில் கருணாநிதி எனும் ஆளுமை, அவர் எடுத்து வைத்த சமூக நீதிப்பாதை, அவரது அரசியல் சாதூர்யத்தால் திமுக தாக்குப்பிடித்து நின்றது. அதிமுகவும் பலம்மிக்க கட்சியானது. ஆனால் காங்கிரஸ் இன்றளவும் அடுத்தவர் தோளில் சவாரிதான். இதை ஏன் சொல்லணும் என்றால் இதைச் சொன்னால்தான் இப்போதுள்ள நிலைமை புரியும்.
இன்னொரு கதையும் இருக்கு 1988-ல் அதிமுக உடைந்த கதை, அதற்கு முன் சொல்லவேண்டியது ஒன்று உள்ளது. இப்படி தேசியக்கட்சி ஆதரவுடன் உருவாகி, மிசாவை ஆதரித்து வந்த இயக்கம் அதிமுக பின்னர் 1977-ல் ஆட்சியை பிடித்து அதன் நிறுவனர் எம்ஜிஆர் மறையும் வரையில் ஆட்சிக்கட்டிலை விட்டு கீழே இறங்கவில்லை. மிகப்பெரும் இயக்கமாக அதிமுக இருந்தது.
எம்ஜிஆர் உயிருடன் இருக்கும்போதே ஜெயலலிதாவுக்கு 1982-ல் அரசியல் பிரவேச வாய்ப்பு கொடுத்தார். 2 ஆண்டுகளில் எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது தனியாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் அளவு ஜெயலலிதா வளர்ந்தார். அவருக்குப்பின்னும் ஆட்கள் திரண்டார்கள். சாதாரண ஆளா ஜெயலலிதா. தனித்தன்மை மிக்கவர். அவரது நடவடிக்கைள் மிகப்பெரிய ஆளுமைகளுக்கு உரித்தானது.
எம்ஜிஆர் 1987-ல் மறைந்தார் அதிமுக 2 ஆக உடைந்தது. பெரும்பாலான மூத்த தலைவர்கள் ஆட்சி இருக்கும் பக்கம் திரண்டார்கள். அதிமுகவுக்கு 132 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 61 தொகுதிகளும் இருந்த சமயம் அது. ஆனாலும் அதிமுக உடைந்தபோது மத்திய அரசு ஜானகி அணிக்கு தனது 61 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வழங்கி அதிமுகவை காப்பாற்றவில்லை. உடையட்டும் என பார்த்தார்கள். கட்சி உடைந்தது. நான்காண்டில் ஆட்சி கவிழ்ந்தது.
அதிமுக 2 ஆக உடைந்தால் 1989- பொதுத் தேர்தலில் ஆதாயம் அடைந்தது திமுக, திமுக கூட்டணி 169 இடங்களை கைப்பற்றியது. அதிமுக ஜெ 27 இடங்களும், ஜானகி அணி 2 இடங்களும் வென்றது. அப்போதுதான் அதிமுக தலைவர்களுக்கு உரைத்தது. நாம் தனித்தனியாக இருந்தால் திமுக பெரும் கட்சியாக வந்துவிடும் என்று உணர்ந்தனர். அந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 29.3%, அதிமுக (ஜெ) 20.1%, அதிமுக (ஜானகி) பெற்றது 9.1%, அந்தக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் பெற்றது 19.8 % வாக்குகள்.
29% தனித்து பெற்றதால் திமுக வென்ற இடங்கள் 169, பிரிந்து நின்றதாலும் வாக்குகள் சிதறியதாலும் அதிமுக இரு அணிகளும் சேர்ந்து பெற்ற தொகுதிகள் 34( 2 தொகுதிகள் ஒன்றான பின் இடைத்தேர்தலில் வென்றது), காங்கிரஸ் 26. இது வரலாறு யாரும் மறக்கக்கூடாத வரலாறு.
தற்போதைய நிலைக்கு வருவோம். அதிமுக தோல்விக்குப்பின் ஜெயலலிதாதான் சரியான தலைமை என இணைந்தது. ஜானகி விட்டுக்கொடுத்தார். தோல்வியின் காரணத்தை அறிந்து அவர்கள் எல்லோரும் எடுத்த முடிவு. அப்போது அதிமுக ஆட்சியில் இல்லை.
ஆனால் அதிமுகவை 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கவைத்து, 2 வது முறையாக வெற்றி பெற வைத்த ஜெயலலிதா மறைந்தவுடன் ஆட்சி என்ற ஒரு காரணத்தால் இன்று அனைவரும் ஒற்றுமை காக்கும் நிலை தான் இன்றைய அதிமுகவில் உள்ளது.
இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஓபிஎஸ் விரட்டப்பட்டது, சசிகலா சிறைக்கு செல்லும் நேரத்தில் எடப்பாடி முதல்வரானது, அதன் பின்னர் மேலிட நிர்பந்தத்தால் ஓபிஎஸ்சை இணைத்துக்கொண்டது, செல்வாக்குமிக்க டிடிவியை விரட்டி அடித்து தங்களை ஆளாகிக்கிய ராஜமாதா சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தாங்களே ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என பட்டம் சூட்டிக்கொண்டதற்கு என்ன காரணம். ஆட்சி இருக்கிறது ஒற்றுமையாக இருந்தால் ஆட்சி முடியும் வரை இருக்கலாம் என்கிற எண்ணம் தான்.
அதிமுக இன்றுவரை உடையாமல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு 2 காரணம் தான். பல்வேறு சந்தர்ப்பங்களில் திமுக வரக்கூடாது என்பதற்காக அதிமுகவை காப்பாற்றிய மத்திய அரசு. ஆட்சியில் கட்சி இருப்பதால் ஆட்சி சுகத்துக்காக ஒற்றுமையாக இருப்போம் என்பதால் வரும் ஒற்றுமை. இதை யாராவது மறுத்தால் என்னுடைய அடுத்தக்கேள்வி இந்த நிலை இப்படியே போக வேண்டியதுதானே இப்ப என்ன திடீர் பிரச்சினை என்பதுதான்.
இப்ப மேலே சொன்ன கதைக்கு வருகிறேன். ஒன்று இந்திரா காங்கிரஸ் 71-க்குப்பிறகு கூட்டணிக்கட்சியான திமுகவை உடைக்க எடுத்த முடிவு, 2 ஏற்கெனவே ஒற்றுமை இல்லாத தங்களை சார்ந்திருக்கும் தலைவர்களை கொம்பு சீவி விடுவதன் மூலம் எப்போதும் மாநிலத்தில் தங்களுக்கு ஏற்ற ஆட்சி இருக்கவேண்டும் என்கிற தற்போதைய மேலிடத்தின் எதிர்ப்பார்ப்பு. இதைக்கூடச் செய்யவில்லை என்றால் மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருந்து பயனில்லை.
இதனால் அவர்களுக்கு என்ன லாபம் ஏன் அவர்கள் அதிமுகவை இந்தப்பாடு படுத்துகிறார்கள் அல்லது ஆட்சிக்கவிழும் நிலையிலும் அதிமுகவை காப்பாற்றுகிறார்கள் என்ன ஆர்வம் என்று கேட்டால் முதல் பாராவில் எழுதியிருப்பதை மீண்டும் படிக்கவும். மாநிலக்கட்சிகளை தேசியக்கட்சிகள் எப்போதும் விரும்பாது. தங்கள் கட்சி வளர்ச்சிக்கு தடையாக பார்க்கும். அப்படி பார்க்கும்போது இருக்கும் 2 கட்சிகளில் ஒன்றை உடைக்க அல்லது முடக்க பார்க்கும்.
இங்கு வலுவாக அடுத்து ஆட்சிக்கு வர 70 சதவீதத்துக்கு மேல் வாய்ப்புள்ள கட்சி திமுக, அது வரக்கூடாது என்று நினைக்கும் டெல்லி மேலிடம் தனது கட்சி செல்வாக்கு இல்லாத நிலையில் அதிமுகவை தனது கைக்குள் வைத்து இயக்க நினைக்கும், தற்போது அதுதான் நடக்கிறது. ஓபிஎஸ் அதனால் தான் கட்சிக்குள் திணிக்கப்பட்டார்.
தற்போது ஓபிஎஸ்-சசிகலா இணைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கி அவர் விடுதலையைக் காரணம் காட்டி எடப்பாடியை வழிக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஓபிஎஸ் ஏற்கெனவே பாஜக சொல்வதை கேட்கும் நிலையில் உள்ளவர் விளைவு, முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் வரை எம்.எல்.ஏ அமைச்சர்களை சரியாக கவனித்து தன்னை வலுவாக்கிக்கொண்டார் எடப்பாடி.
இதனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்த ஓபிஎஸ் தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒன்று கட்சியில் அல்லது ஆட்சியில் வலுவாக காலூன்ற முடிவு செய்து விட்டார். ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓபிஎஸ் தேர்தல் நேரத்தில் பல சிக்கல்களை உருவாக்க முடியும். அதனால் முதல்வர் வேட்பாளர் அஸ்திரத்தை இப்போதே கையிலெடுத்துவிட்டார்.
ஓபிஎஸ்சின் திடீர் விஸ்வரூபத்தை எடப்பாடி கோஷ்டியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலை அதனால் சமாதானம் பேசிப்பார்க்கிறார்கள், ஆனால் இது சாதாரண சமாதானத்தால் முடியாது. கட்சியில் தன் இடத்தை தக்க வைக்க சரியான நேரம் என ஓபிஎஸ் நினைப்பதால் கட்சிப்பதவி, சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவாளர்களை அதிகம் நிற்கவைக்க முடிவு செய்துள்ளார்.
சரி இப்படியே பிரச்சினை முடியுமா என்று பார்த்தால் முடிவதுபோல் தெரியவில்லை. இப்ப இரண்டாவது கதையைச் சொல்கிறேன், “ இரண்டு பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்ததாம் அதை சரிவர பங்குபோட முடியாததால் குரங்கிடம் பஞ்சாயத்து போச்சாம் இரு பாகமாக அப்பத்தை பிட்டு தராசில் வைத்த குரங்கு ஒரு பக்கம் தட்டு இறங்கியவுடன் அந்த தட்டில் உள்ள அப்பத்தை எடுத்து கடித்துவிட்டு வைத்ததாம் கூடுதலாக கடித்ததால் மறு தட்டில் உள்ள அப்பம் கீழே இறங்கியது. அப்புறம் அதை எடுத்து ஒரு கடி, இப்படி இங்கு ஒரு கடி அங்கு ஒரு கடி கடையில் அப்பம் போனது குரங்கின் வயிற்றுக்குள்”.
இப்ப கள நிலைமைக்கு வருவோம். திமுகவை முடக்க திட்டம் போட்டும் திமுகவின் செல்வாக்கை தடுக்க முடியவில்லை, அதற்கு திமுக காரணமல்ல மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு திமுக பக்கம் ஆதரவு திரும்புகிறது. இதை உணர்ந்து அதிமுகவை தயார் செய்யும் முயற்சியிலும் இந்த நேரத்தில் அதிமுக கூட்டணிக்குள் வலுவாக சட்டமன்ற தொகுதிகளை வாங்கிவிடவும் மேலிடம் முடிவு செய்து இருவரையும் மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது.
அதிமுக எனும் அப்பம் இரு பூனைகளின் அனுசரிப்பில்லாத நிலையால் என்ன ஆகப்போகிறது என்பதுதான் இப்போதைய எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து தொண்டர்கள் முன் உள்ள கவலைத்தோய்ந்த கேள்வி. இந்தக்கட்டுரையை எழுதக்காரணம் ஒரு உண்மையான எம்ஜிஆர் காலத்து தொண்டர் ஆதங்கத்துடன் சொன்னது. எப்படி வளர்ந்து விருட்சமாக உள்ள கட்சி. மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பைக் காண்பித்த ஜெயலலிதா கட்டிக்காத்தக்கட்சி.
இன்று இவர்கள் சண்டையால் உடையப்போகிறது. இதுவரை இருந்த ஒற்றுமை கட்சிப்பாசத்தால் அல்ல, பதவி சுகத்தால். ஆட்சி முடியப்போகிறது. இனியும் கட்சி மேல் அக்கறைக்கொண்டு இவர்கள் ஈகோவை விட்டுக்கொடுத்து ஒன்றுப்பட்ட கட்சிக்குள் பிரச்சினையை தீர்த்துக்கொண்டால் மக்களுக்கும் அதிமுக மீது நம்பிக்கை வரும். கட்சியும் காப்பாற்றப்படும். ஒரு வேளை தேர்தலில்கூட வெல்லலாம்.
அதை செய்யாமல் கட்சியை இரு பக்கமும் இழுத்து உடைத்தார்கள் என்றால், மீண்டும் அதிமுகவை கட்டி அமைக்க ஜெயலலிதா போல் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு தலைவர் இல்லை. கட்சி இரண்டு மூன்றாய் உடைந்துவிடும். பிறகு சேரவே சேராது.
‘கண்ணுக்கு தெரியும் வரை எதிரிகளையே காணமுடியவில்லை’ என்று ஜெயலலிதா சொல்லும் அளவுக்கு அப்போதைய அதிமுக இருந்தது, கட்சிக்குள்ளேயே எதிரிகளைத்தவிர யாரும் இல்லை என இப்போதைய அதிமுக இருக்கிறது என்று பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் அந்த தொண்டர்.
இப்ப மீண்டும் அந்தப்பாட்டை பாடுங்கள்… நந்தவனத்தில் ஒரு ஆண்டி…அவன் நாளாறு மாதமாய் குயவனை வேண்டி….
கட்டுரையாளர்: கிராம்சி