பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, பூமியை விட 17 மடங்கு எடையும், இரு மடங்கு அளவும் கொண்ட கடின பாறைகளால் ஆன கெப்ளர்-10 சி கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர்.
இந்நிலையில்தான், இப்போது கெப்ளர்-10 சி கிரகத்தைவிட, மிகப்பெரிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுபற்றி முழுமையான தகவல்கள் கிடைக்காத நிலையில், கெப்ளர்-10 சியைவிட எல்லா வகையிலும் இது பிரம்மாண்டமானது என்கிறார்கள்.
கெப்ளர்-10சி மிகப்பெரும் பூமி (மெகா எர்த்) என்று கூறப்படும் ‘கெப்ளர் -10 சி’ சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை 45 நாள்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இந்த கிரகம், ட்ராகோ நட்சத்திர மண்டலத்தில், பூமியில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. முழுவதும் பாறைகள் மற்றும் திடப் பொருட்களால் ஆன இந்தக் கிரகம், இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை விட பெரியது.
அதனால் இது மிகப்பெரும் பூமி என்று கூறப்பட்டது. இப்போது இந்த கிரகத்தை சுற்றிலும் அடர்த்தியான வாயு மண்டலம் இருப்பது தெரியவந்துள்ளது. இதை ஹார்வர்டு ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மைய விஞ்ஞானி சேவியர் டமஸ்கியூ கண்டுபிடித்தார்.
டி.ஓ.எல்.1075 பி தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு டி.ஓ.எல்.1075 பி (TOl-1075 b) என்று பெயரிட்ட நாசா, அங்கு மனிதர்கள் சென்றால், அவர்களின் எடை 3 மடங்கு அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பூமியை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த கிரகத்தை ‘சூப்பர் எர்த்’ என்று அழைக்கிறார்கள்.