சென்னையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பேராபத்தை விளைவிக்க கூடிய 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மணலியில் இந்த 740 டன் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்காக இந்த வேதிப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வேதிப்பொருளை கையாளும் நிறுவனங்கள் பி 5 என்ற லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இறக்குமதி செய்த நிறுவனத்திடம் அந்த குறிப்பிட்ட லைசன்ஸ் இல்லாததால் 20 கண்டெய்னர்களில் வந்த 740 டன் அமோனியம் நைட்ரேட்டை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மணலியில் சுங்கத்துறைக்கு சொந்தமான பெட்டக காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன். வெயிலில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் பேராபத்தை விளைவிக்க கூடிய இந்த வேதிப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்த நிறுவனம் சுங்கத்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்திலும் சுங்கத்துறை தீர்ப்பாயத்திலும் தொடர்ந்த வழக்கு ஐந்து வருடங்களாக நடைபெற்று வந்ததால் இந்த கண்டெய்னர்கள் அப்படியே வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 135 உயிரிழந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் ஆபத்தை விளைவிக்க கூடிய பொருட்கள் இருக்கின்றனவா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சுங்கத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. அப்போது தான் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தது.
உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 740 டன் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் திலைவில் ஏராளமான குடியுருப்புகள் உள்ளன. மேலும் 500 மீட்டர் தொலைவில் CPCL ஆலை உள்ளது. இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் ஆபத்தை விளைவிக்க கூடிய ரசாயனப் பொருளை இப்படி பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைத்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. அமோனியம் நைட்ரேட்ப்ல் தண்ணீர் பட்டால் அது பாறைபோல் இருகி விடும். அப்போது சிறிய உறாய்வு ஏற்பட்டாலே பெரிய அளவில் விபத்து நிகழ வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனாலும் இந்த 37 கண்டெய்னர்களும் கடந்த ஐந்து வருடங்களாக வெயிலிலும் மழையிலு காய்ந்து கொண்டிருக்கிறது. இந்த அமோனியம் நைட்ரேட்டை ஏலம் விடச்சொல்லி சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் இன்னும் இந்த ஆபத்தை அதிகாரிகள் இருப்பு வைத்திருக்கிறார்கள். பெய்ரூட்டில் இப்படி ஒரு விபத்து நடைபெறாமல் இருந்திருந்தால் சென்னையில் கண்டெய்னர்களுக்குள் படுத்துக்கிடக்கும் இந்த எரிமலை வெளியில் தெரியாமலே போயிருக்கும். எனவே உடனடியாக இந்த ரசாயனப் பொருளை பத்திரமாக அப்பூறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
சுரா-