திமுகவின் பொதுக்குழு கூட்டங்கள் பெரும்பாலும் அண்ணா அறிவாலயத்திலோ இல்லை சென்னைக்குள்ளாகவோ முடிந்து விடும். ஆனால் மதுரையில் நடைபெற உள்ள நாளைய பொதுக்குழுவும், முதலமைச்சர் ஸ்டாலினின் இன்றைய நடைபயணமும் பல தொலைதூர கணக்குகளை கொண்டிருக்கிறது.

பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு பிஇடி பீரியட் என்றாலோ, விடுமுறை என்றாலோ எப்படி ஒரு ஆனந்தம் தொற்றிக் கொள்ளுமோ அப்படித்தான் திமுகவிற்கும். தேர்தல் என்றாலே திமுகவிற்கு தனி குஷி பிறந்து விடும். தேர்தலை ஒட்டிய வேலைகள் படுஜோராக நடக்க ஆரம்பித்து விடும். இந்த ராஜ்ய சபா தேர்தலைக் கூடப் பாருங்கள். ஜூன் 19ந் தேதி தேர்தல் நடைபெறும் என மே 26ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. 28ந் தேதி 3 திமுக வேட்பாளர்களை அறிவித்து விட்டு, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடத்தை அறிவித்து விட்டது. அதற்கடுத்த நாள் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும், முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்று விட்டு சென்று விட்டார். இந்த நான்கு வேட்பாளர்களும் ஜூன் 9ந் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இந்நேரம் ஆவணங்களை தயார் செய்து வைத்திருப்பார்கள். அதிமுகவைப் பாருங்கள், இரண்டு வேட்பாளர் அறிவிப்பிற்கு 5 நாட்களுக்கு மேலாக ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். கூட்டணியில் இல்லையென்றாலும் தேமுதிகவும், பாமகவும் அதிமுகவை முடிவெடுக்க விடாமல் வைத்திருக்கிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில் திமுக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்றவர்கள் வெளியேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. தமிமூன் அன்சாரியும் திமுக முகாமிற்கு இடம் பெயர்ந்து விடுவார். இப்படிப்பட்ட சூழலில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் நடைபயணத்தை மதுரையில் இருந்து தொடங்கி இருக்கிறார்.
மதுரை விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடியில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கிட்டத்தட்ட 25 கி.மீ வரை நடந்து சென்று மக்களைச் சந்தித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சளைக்காமல் நடக்கக் கூடியவர் ஸ்டாலின். காலையோ, மாலையோ நடையை உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக வைத்திருப்பதால் நடைபயணத்தோடு கூடிய அரசியலை வாய்ப்புக் கிடைக்கும் போது இப்படி பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் அவருக்கு இருக்கிறது. நமக்கு நாமே பயணத்தின் போதும், தேர்தல் பிரசாரங்களின் போதும் ஸ்டாலினின் பெரும்பான்மையான பயணத்திட்டங்களில் நடைபயணமும் கட்டாயம் இருக்கும்.

முதல் பாராவில் குறிப்பிட்டது போல தேர்தல் என்ற வார்த்தையைக் கேட்டதும் குஷி மூடுக்கு வந்து விடும் திமுக. தேர்தல் வரப்போகிறது என்றாலே அறிக்கை தயாரிப்புக் குழுவை அறிவித்து விடும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை அனுப்ப மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டு விடும். வேட்பாளர் விருப்ப விண்ணப்பங்கள் விற்பனைக்கு வந்து விடும். தேர்தல் நேர்காணல் குழு அமைக்கப்பட்டு விடும். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழு, தொகுதிப் பங்கீட்டிற்கான குழு அமைக்கப்பட்டு கட்சித் தலைமை மற்றும் முக்கியப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறத் தொடங்கி விடும். இதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் செய்யும் தான் என்றாலும் அனைத்துக் கட்சிகளையும் தாண்டி முதலாவதாக திமுக செய்து முடித்து விடும்.
சுற்றி வளைக்கும் வியூகத்தோடு களமிறங்கி இருக்கும் திமுக, தனது ஆட்டத்தை தெற்கிலிருந்து தொடங்கி இருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில் திமுக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்றவர்கள் வெளியேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. தமிமூன் அன்சாரியும் திமுக முகாமிற்கு இடம் பெயர்ந்து விடுவார். இப்படிப்பட்ட சூழலில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் நடைபயணத்தை மதுரையில் இருந்து தொடங்கி இருக்கிறார்.
நாளைய பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு தென்மண்டலத்திற்கு என சில முக்கியமான அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணமும் இனித் தொடரும் போது மாவட்ட வாரியாக புதிய புதிய அறிவிப்புகளை திமுக வெளியிட்டுக் கொண்டே இருக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் நாளுக்குள் அனைத்து சிறப்புத் திட்டங்களையும் அறிவித்து விட திமுக திட்டமிட்டு இருக்கிறது.

இம்முறை அதிமுகவின் கூட்டணியில் முதலாவதாக துண்டைப் போட்டு அமர்ந்து விட்டது பாஜக. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவும் இம்முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் முழு முயற்சியோடு களமிறங்கத் திட்டமிட்டு வருகிறது. பாமகவும் அதிமுக மீது பிரியம் கொண்டிருப்பதை தனது ஆதங்கப் பேட்டி வாயிலாக மருத்துவர் ராமதாசும் தெரிவித்திருக்கிறார். விஜயை எப்படியாவது கூட்டணி வண்டியில் ஏற்றி விட வேண்டும் என நினைக்கிறது அதிமுக. அவரைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அதிமுக தலைமை கட்டளையிடுவதும், இப்போது வரை அதிமுக பற்றி விஜய் வாய் திறக்காமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவை குட்டி குட்டியாகப் பிரித்து வைத்திருந்தாலும், பாஜக தனது மாயக்கயிற்றால் அவர்களைக் கட்டி தன் வசமே வைத்திருக்கிறது. இவர்கள் எல்லாம் இப்போது அதிமுக கூட்டணியில் இல்லையென்றாலும், பாஜகவின் கூட்டணயில் இருக்கிறார்கள். எப்பிடிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் முக்குலத்தோரின் வாக்குகள் அதிமுகவிற்குத்தான் என்பது கண்கூடு. அதிமுக ஒரு பலமான கூட்டணியை அமைத்து விட்டால் அதை எதிர்கொள்வது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரிக்க உள்ள வாக்குகளை எந்தக் கணக்கில் கொள்வது திமுக தலைமை பல கணக்குகளைப் போட்டு தனது தேர்தல் நடைபயணத்தை தொடங்கியிருக்கிறது.

மதுரையைப் பொறுத்தவரை 10 தொகுதிகள் இருக்கின்றன. இதில் அதிமுகவும், திமுகவும் சமபலத்தில் இருக்கின்றன. நாடாளுமன்றத் தொகுதி திமுக வசம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இயல்பாகவே அதிமுக சார்பு கொண்ட மதுரையை தன்வசமாக்கும் முயற்சியில் திமுக இறங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தனது தம்பிக்காகவும், கட்சிக்காகவும் இம்முறை அழகிரியும் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் என்பதை இலக்காக நிர்ணயித்து அதற்கான வேலைகளை இந்தாண்டு தொடக்கத்திலே தொடங்கி விட்டது. தற்போது பொறுப்பில் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு மீண்டும் வாய்ப்பு, யாரெல்லாம் செல்வாக்கானவர்களாக இருக்கிறார்கள் என்பது முதற்கொண்டு அனைத்துப் பட்டியலையும் தயாரித்து விட்டது திமுக. எனவே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, சுற்றி வளைக்கும் வியூகத்தோடு களமிறங்கி இருக்கும் திமுக, தனது ஆட்டத்தை தெற்கிலிருந்து தொடங்கி இருக்கிறது.




