இந்தியாவின் மிக நம்பகமான மற்றும் 1 கோடி பிளேயர்கள் கொண்ட ரம்மி தளத்தில் விளையாடுவீர், ரூ.2000 வெல்கம் போனஸ் பெறுவீர் என கூவி அழைக்கின்றன, பல இணைய தளங்கள்.
நம்மூரை பொறுத்தவரை, சீட்டு விளையாட்டு என்பது சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் உள்ள ரம்மி விளையாடப்படும் கிளப்புகளில் கூட, வயது வந்தவர்கள் பொழுதுபோக்கத்தான் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை யார் வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி விளையாட முடியும் என்பதில் இருந்தே, இதனால் ஏற்படப்போகும் ஆபத்து பெரிய அளவில் இருக்கும் என்பது தெரிகிறது.
ஆன்லைனில் நீங்கள் கேண்டி க்ரஷ் விளையாடுகிற மாதிரியோ, ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாடுகிற மாதிரியோ அல்ல, ஆன்லைன் ரம்மி விளையாட்டு. என்னதான் ஒரு இணையதளம் ‘https’ என அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான இணையதளம் என்று சொல்லக்கூடியதாக இருந்தாலும், ஆன்லைனில் நீங்கள் யாருடன் விளையாடுகிறீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல, இந்தியாவில் வலுவான டிஜிட்டல் கண்காணிப்போ அல்லது தவறு ஏற்பட்டால் பணம் திரும்பக் கிடைக்கும் என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது.
இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடினால், பிற்பாடு இதிலிருந்து வெளியேறுவது கடினம். ஒருமுறை விளையாடி விட்டு இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும், அந்த தளத்தின் பேனர் விளம்பரங்கள் உங்களைத் தொடர்ந்து வந்து சீட்டு விளையாடும் ஆசையைத் தூண்டும். நிச்சயமற்ற ஆட்டம், எதிராளி யார், அவர் திறமை இதில் என்ன என்பதே தெரியாத நிலையில், பணம் மட்டுமல்ல, நேரமும் பெரிய அளவில் வீணாகும்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் ரம்மிக்கு எப்படி அனுமதி கிடைத்தது? கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகர் மற்றும் எஸ்.ஏ.போபர் இருவரும் கொடுத்த தீர்ப்பு இதற்கு காரணம்.
திறன் சார்ந்த விளையாட்டுக்கும், அதிர்ஷ்ட வாய்ப்பினை எதிர்பார்க்கும் சூதாட்டத்துக்கும் சம்பந்தமில்லை. அதே நேரம், இதை நடத்தும் நிறுவனங்கள் புதிய நிறுவனங்களாக இருக்கின்றன என்கிற கேள்விக்கு இந்த மனுவில் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை” என கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 13ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்துதான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுத் தளங்களின் விஸ்வரூபம் தொடங்கின.
ஆன்லைன் ரம்மி – மாநில அரசின் பங்கு என்ன?
விளையாட்டு (Gaming) என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும். அதனால் தான் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே இதற்கென சட்டம் இயற்றி வைத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ்நாடு விளையாட்டுச் சட்டம் (Tamil Nadu Gaming Act) மற்றும் சென்னை நகர காவல்துறை சட்டம் (Chennai City police Act) என்ற சட்டங்களின் கீழ் சீட்டு விளையாட்டுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சட்டத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும். உரிய சட்டமும் முறைப்படுத்தலும் இல்லாத காரணத்தால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை சிறுவர்கள் விளையாடுவதை எப்படித் தடுப்பது, ஏமாற்றப்படாமல் எப்படிக் கண்காணிப்பது, எங்கே முறையிடுவது என்பதில் தெளிவு இல்லை.
சில மாநிலங்களில் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுவது முறைப்படுத்தப் பட்டுள்ளது. உதாரணமாக கோவா, சிக்கிம் மாநிலங்களில் இந்த வகை சூதாட்டத்தை முறைப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சட்டம் இயற்றி, அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்போது, ஏமாற்றப்படுவதும், சட்ட மீறல்களும் தடுக்கப்படும்.
போட்டிகள், ஊக்கப்பரிசுகள் என பல்வேறு வழிவகைகளில் இணையவாசிகளை இந்த விளையாட்டில் அடிமையாகச் செய்கின்றன இந்த ’இணைய ரம்மி’ வலைத்தளங்கள். இந்நிறுவனங்களின் பெருத்த இலாபத்தைக் கண்டு பல்வேறு பன்னாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்கள் இவற்றில் தங்கள் முதலீடுகளைக் கொட்டுகின்றன.
ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் ஒரு முறை விளையாடி வெல்ல வேண்டும் என்ற நப்பாசையும், தோல்வியடைந்தால் ஒரு முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டுதலும் இணையப் பயனர்களை இந்தத் தூண்டிலில் சிக்க வைக்கிறது. இதில் இலட்சக் கணக்கில் பணம் இழந்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் மனச்சிதைவு ஏற்பட்டு, தற்கொலை வரை போக வாய்ப்புகள் உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தளங்களில், விளையாடி வரும் சிலரைத்தொடர்பு கொண்டோம். அவர்கள் சொல்கிற விஷயமெல்லாம் கொஞ்சம் கிலி ஏற்படுத்தத்தான் செய்கின்றன.
“முதல் தடவை 500 ரூபாய் ஜெயிச்சேன். அடுத்து நான் ஜெயிக்கவே இல்லை ” என்கிறார் ஆன்லைன் ரம்மியில் பல ஆயிரத்தை இழந்த சேகர்.
‘உங்க அக்கவுண்ட்ல பணம் போட்டவுடனே வர்ற முதல் கேம், நல்லா ஜெயிக்கிறாப்பல வரும். ஆர்வத்துல தொடர்ந்து விளையாடினிங்கன்னா அப்புறம் நாமம்தான். ஆனா ஒண்ணு, ஜெயிச்ச காசை ரிக்வஸ்ட் கொடுத்தா, ரெண்டு நாளில் நம்ப வங்கிக் கணக்குக்கு போட்டுவிட்டுடுறாங்க’ என்கிறார், சென்னையை சேர்ந்த சடையாண்டி.
இந்த விளையாட்டில் உங்களுடன் விளையாடுவது யார் என்பது உங்களுக்குத் தெரியாது. நாம் தொடர்பு கொண்ட பலரும் ஒப்புக்கொள்கிற விஷயம் ஒன்று உள்ளது. ’ஏதாவது ஒரு ஆட்டத்தில், நீங்க நூறோ, இருநூறோ ஜெயிச்சீங்கன்னா தொடர்ந்து வர்ற பல ஆட்டங்கள்ல ஜெயிக்கவே முடியாது. 99% அப்படித்தான் அமையும்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு வணிகத்தில் புழங்கும் பணத்தின் மதிப்பு
ஆன்லைன் ரம்மி விளையாட்டு வணிகத்தில் புழங்கும் பணத்தின் மதிப்பு ஆண்டுதோறும் 22 சதவிகிதம் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ‘ஆன்லைன் ரம்மி மூலமாக 2014-ம் ஆண்டு 60 லட்சம் ரூபாய் வணிகம் நடைபெற்றது. 2018-ம் ஆண்டில் 2 கோடி ரூபாய் வணிகம் நடைபெற்றது’ என்கிறது. ‘பப்ஜி, ஃப்ரீ ஃபயர், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆண்டு தோறும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டே வருவதால், 2023-ம் ஆண்டில் இந்த விளையாட்டுகள்மூலம், 11,300 கோடி ரூபாய் வணிகம் நடை பெறும்’ என அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் அறிவித்திருக்கிறது.
2010-ம் ஆண்டு 3 கோடி பேர் மட்டும்தான் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 2018-ம் ஆண்டில் 30 கோடி பேர் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் பெண்கள் என்கிறது புள்ளி விவரம். இந்தியாவில் 5.5 கோடி பேர் விளையாடும் ஆன்லைன் ரம்மியை, ‘தி ரம்மி ஃபெடரேஷன்’ (டி.ஆர்.எஃப்) என்ற அமைப்புதான் முறைபடுத்துகிறது. நாடு முழுவதும் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் இந்தத் துறையில் 18 நிறுவனங்கள் ஈடுபட்டபோதிலும், 7 நிறுவனங்கள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன.
டிஜிட்டல் சூதாட்டம்
இந்திய நாட்டில் பணம் வைத்து விளையாடும் ஆட்டத்திற்கு பெயர் சூதாட்டம். சூதாட்டம் யார் ஆடினாலும் இந்த கண்ணியம் தவறாத காவல்துறை உடனே கைது செய்யும். ஆனால் நீங்கள் இணையத்தளத்தில் பணம் வைத்து சூது விளையாடினால் உங்களுக்கு முழு ஆதரவும், பாதுகாப்பும் கொடுக்கும் இந்த அரசு. ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே பொழுதைக் களித்து வருகிறார்கள். அவர்களை குறிவைத்துதான் இந்த சூதாட்டம் நடத்தும் கழுகு கூட்டம் படையெடுக்கிறது. எம்.பி.எல். ரம்மி, பப்ஜி போன்ற விளையாட்டுகளை பணம்கட்டி ஆடி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் அதிக பணத்தை கட்டி ஏமாந்துள்ளனர். இப்படியான மாணவர்களை ஏமாற்ற சினிமா பிரபலங்களையும், கிரிக்கெட் பிரபலங்களையும் வைத்து விளம்பரம் செய்வார்கள்.
குறிப்பாக கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் 16 லட்சம் ரூபாயை தந்தை கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல் செலுத்தி அனைத்து பணத்தையும் இழந்துள்ளான். இதையறிந்த தந்தை அந்த சிறுவனை மெக்கானிக் ஷாப்கடையில் பணியில் சேர்த்து அவனுக்கு தண்டனை கொடுத்துள்ளார். இப்படி பல குடும்பங்கள் காலம் முழுவதும் சேர்த்த வாழ்நாள் சேமிப்பு பணத்தை ஒரே நாளில் இழந்து வீதிக்கு வந்துள்ளன. ஊருக்கு ஒதுக்கு புறத்தில் காசை வைத்து சூதாடினால் காவல்துறை கடுமையான தண்டனை கொடுக்கிறது. ஆனால் இணையத்தளத்தில் அதைவிட பல மடங்கு அதிகமாக சூதாட்டம் நடத்திவரும் இந்த பணந்தின்னி கழுகுக்கூட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு?
இப்படி இணையதளம் மூலம் ஏழை எளிய மக்களை குறிவைத்து பல நிறுவனங்கள் பணத்தை பறித்துவருகிறது. இதில் நாம் மக்களை குறை சொல்லமுடியாது. இப்படி தனியார் நிறுவனங்கள் ஏமாற்றுவதற்கு முழு அதிகாரமும், பாதுகாப்பும் கொடுக்கும் இந்த மத்திய, மாநில அரசுகளைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும். ஏன் இந்த இணையதள மோசடிகளுக்கு தடை விதிக்க மறுக்கிறது என்று மத்திய அரசிடம் கேட்டால் இவர்களை போன்ற தனியார் நிறுவனங்கள் தான் இந்த நாட்டிற்கு செல்வத்தை அளித்து வருகிறார்கள். எனவே இவர்களை நாம் தடை விதிக்க முடியாது என்று பதிலளிப்பார்கள். டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மோடி அரசு இந்திய மக்களை பெரும் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது என்பதற்கு இந்த இணையதள மோசடியே உதாரணம்.
ஆன்லைன் ரம்மி என்ற ஆபத்து எல்லை மீறுவதற்குள் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்பதை உணர்வது எப்போது ?