ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவிவருகிறது. ஆனால், இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கத்தைக் குறித்து விவாதம் நடத்தியவர்கள் இன்று சசிகலா எப்போது வெளிவரப்போகிறார் என்பது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சசிகலா விடுதலை என்றால் கர்நாடகச் சிறைத்துறைதான் இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் மீதும் அவரின் உறவுகளான இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
2014-ம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு நான்கு ஆண்டு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பையே 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவருடன் அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் அடைக்கப்பட்டனர்.

நான்கு ஆண்டு தண்டனை சசிகலாவுக்கு விதிக்கப்பட்டாலும், ஏற்கெனவே அவர் சிறையிலிருந்த நாள்கள் மற்றும் நன்னடத்தை உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி, தண்டனை காலத்துக்கு முன்பாகவே அதாவது 2020-ம் ஆண்டு இறுதியிலே விடுதலையாவார் என்று பேசப்பட்டு வந்தது. மேலும், சசிகலா தரப்புக்கு ஆதரவாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க-வின் சுப்பிரமணியன் சுவாமியும் குரல் கொடுத்து வந்தார்.
அடுத்து, சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த பத்துக் கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டார்களா என்பது உறுதிசெய்யப்பட வேண்டும். பரப்பன அக்ரஹார சிறையில் விதிமுறைகளை மீறியதாக கர்நாடகாவின் அன்றைய சிறைத்துறை அதிகாரி ரூபா ஓர் அறிக்கையை கர்நாடக அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை என்னவானது, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும். அதன் பிறகே சசிகலாவின் விடுதலையைப் பற்றி யோசிக்க முடியும்.
மத்தியில் பி.ஜே.பி அரசு இருப்பதால் அவர்களின் ஆதரவு இல்லாமல் விடுதலை சாத்தியமில்லை என்பதை சசிகலா தரப்பு உணர்ந்திருந்தது. சட்டரீதியாக ஒருபுறம் சசிகலாவின் விடுதலையை வேகப்படுத்தும் வேலைகளை அவருடைய வழக்கறிஞர்கள் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார் என்று செய்திகள் கசிந்தன.
இந்நிலையில் பா.ஜ.க-வின் தேசிய நிர்வாகியான ஆசீர்வாதம் ஆச்சாரி, தனது முகநூல் பக்கத்தில் சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி விடுதலையாகப் போகிறார் என்று பதிவிட்டிருந்தார். இந்த தகவல் அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்கப்படுகிறது. இந்த ட்வீட்டால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்த ட்விட்டரில், ‘வெயிட் ஃபார் ஃபர்தர் அப்டேட்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு பதிவை வெளியிட்டதன்மூலம் அ.தி.மு.க-வை பா.ஜ.க ‘பல்ஸ்’ பார்க்கிறது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து பா.ஜ.க-வின் அடுத்த ‘மூவ்’கள் அமையும். தவிர இப்படி ட்வீட் செய்ததின் மூலம் தமிழகத்தில் சுவாமி, ஆடிட்டர் வரிசையில் செல்வாக்கு பொருந்திய நபராக நானும் இருக்கிறேன் என்பதையும் தமிழக அரசியல் களத்துக்குத் தெரிவித்துள்ளார் ஆசீர்வாதம்.

இந்நிலையில், நன்னடத்தை அடிப்படையில் வெளிவரும் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள். அரசியலுக்காகவும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துவதற்காகவும் ஆச்சாரி இது போன்ற வேலைகளைச் செய்திருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழக அரசியலில் வலுவான ஓர் அணியை அமைக்க பா.ஜ.க விரும்புகிறது. அதனால் சசிகலாவை மும்முரமாக வெளியே கொண்டு வரும் வேலையில் பா.ஜ.க இறங்கியுள்ளது. சசிகலா செலுத்த வேண்டிய அபராத்த் தொகை 10 கோடி ரூபாயை செலுத்த அவர்களுக்கு அவகாசம் எல்லாம் தேவையில்லை.
சசிகலாவின் சிறைவாசம் 3 ஆண்டுகள் முடிந்து 4வது ஆண்டில் இருக்கிறது. அவர் இல்லாத அதிமுக என்பதை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்றும் வழி மொழிந்து வருகின்றனர்.
ஆனால் டிடிவி தினகரனோ அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். சசிகலாவின் ஆசியின் பெயரால் கட்சியை நடத்தி வருவதாக கூறும் அவர், கட்சி அலுவலகத்தை இப்போது திறந்து வைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்த முக்கிய தளபதிகள் பலரும், அதிமுகவிலும், திமுகவிலும் இணைந்துவிட்டனர். மனம்தளராமல் அவர் கட்சியை நடத்தி வருகிறார். அடுத்து வரக்கூடிய இடைத்தேர்தலில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா சிறையில் இருந்து ரிலீஸானால், அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் அவர் பக்கம் சென்றுவிடும் சூழல் உள்ளது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் சசிகலா தொடர்பான விசயங்களை கூர்ந்து கவனிக்கும்படி தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு அவர் உத்தரவு போட்டிருக்கிறார். இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியேறும் தருணத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் வரும் என்று சுப்பிரமணியன் சுவாமி ஆரூடம் கூறி இருக்கிறார்.

ரிலீசுக்கு ஏதாவது தடைகள் இருந்தால், கொஞ்சம் பிரஷர் தந்தால் போதும், செப்டம்பரிலேயே வெளியே வந்துவிடலாம் என்று நெருக்கமானவர்கள் சிலர் சசிகலாவுக்கு சொல்லி உள்ளனர். ஆனால் சசிகலாவோ, செப்டம்பர் மாசம், கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் என்கிறார்களே, அந்த நேரத்தில் ரிலீஸ் ஆனால் என்னை வரவேற்க பெரிய அளவு கூட்டத்தை திரட்ட முடியாதல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா பெரிய பிளானில் இருப்பதாகவே தோன்றுகிறது.. இல்லையென்றால் ஆச்சாரி ஏன் ட்வீட் போட வேண்டும்? சசிகலாவின் ரிலீஸை வைத்து தமிழகத்தில் பாஜக என்ன ஆட்டம் ஆட காத்திருக்கிறதோ தெரியவில்லை.