போதைப் பொருள் வழக்கில் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்துப் பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதை பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடைபெற்று வந்தது. அதே நேரத்தில் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மனும் அனுப்பி இருந்தார்கள். இதனை ஏற்று நடிகர் கிருஷ்ணா நேற்று மதியம் 2 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார்.
நீடிக்கும் விசாரணை
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்குப் பதிலளித்த கிருஷ்ணா தான் கொகைன் உள்ளிட்ட இந்த போதை பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை என்றும் அவைகளைப் பயன்படுத்தும் அளவுக்கு எனது உடல்நிலை கிடையாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும் கிருஷ்ணா போதைப் பொருட்களை பயன்படுத்தி உள்ளாரா என்பதைக் கண்டறிவதற்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள். இதில் கிருஷ்ணா போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தவில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் கிருஷ்ணாவிடம் 20 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை இன்று காலையில் நீடித்தது.

மீண்டும் மீண்டும்
இன்று காலை 9 மணியளவில் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்த திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் கிருஷ்ணாவிடம் மீண்டும் விசாரணையை தொடங்கினார். அப்போது ஜெயசந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப
அதற்கு பதிலளித்த துணை ஆணையர், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரவித்தார்.
இன்று காலை 6 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் கலாச்சேத்ரா காலனியில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு அவரது வீட்டில் அனைத்து அறைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த பீரோக்கள் அலமாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் கிருஷ்ணா பயன்படுத்தப்படும் காரிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் கிருஷ்ணாவில் வீட்டிலிருந்தோ காரில் இருந்தோ போதைப் பொருட்கள் எதுவும் கைப்பற்ற படவில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் கிருஷ்ணாவிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பணப் பரிமாற்றம்
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அதிமுக பிரமுகரான பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள், பண பரிமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடத்திய போது நடிகர் கிருஷ்ணாவும் பண பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகி பிரசாத்துடன் எந்த மாதிரி தொடர்பில் இருந்தீர்கள்? உங்கள் இருவருக்கும் இடையே எந்த அடிப்படையில் பண பரிமாற்றம் நடைபெற்றது என்பது போன்ற கேள்விகளும் கிருஷ்ணாவிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த கிருஷ்ணா சினிமா தொடர்பாக இருவருக்கும் இடையே நட்பு இருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அதிமுக பிரமுகரான பிரசாத்துடன் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணா வெப் சீரியல் ஒன்றை வெளியிடுவது தொடர்பாக பிரசாத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருப்பதாக தெரிகிறது. இதற்காகவே அவர் பிரசாத்துக்கு பணம் அனுப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது உண்மையான தகவல் தானா? இல்லை போதைப் பொருளுக்காக அவர் பணம் ஏதும் கொடுத்தாரா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது
கைதாவாரா?
இந்த விசாரணை முடிவில் தான் ஸ்ரீகாந்த் போன்று நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும். கிருஷ்ணாபுரம் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் முன்பு பத்திரிகையாளர்கள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடமும் போதை பொருள் வழக்கில் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருவது தமிழ் திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கிருஷ்ணாவில் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் மருந்துகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை போலீசார் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சோதனையின் முடிவிலும் போதைப்பொருள் வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
எனக்கு இரைப்பை அலர்ஜி இருக்கிறது. அதுமட்டுமின்றி இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதனால் அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறேன். நான் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக வெளியாகும் தகவலில் எந்த உண்மையுமில்லை. அது போன்ற போதை பொருளை பயன்படுத்தினால் நான் உயிருடனே இருக்க முடியாது என்று நடிகர் கிருஷ்ணா போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களையும் அவர் போலீசாரிடம் கொடுத்துள்ளார். நடிகர் கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் அளித்திருப்பதாகவும் தெரிகிறது. பிரசாத் மற்றும் பிரவீனிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் மேலும் சில சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேட்டி ஒன்றில், திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருக்கும் சிலரே இந்தவகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாகவும், ஸ்ரீகாந்த் மாட்டிக்கொண்டார் எனவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொக்கைன் எனும் போதைவஸ்து தமிழ் சினிமாவை ஆளும் திரைப்பிரபலங்கள் பலரின் தூக்கத்தை காவு வாங்கப் போவது நிச்சயம்.




