தற்போது உலகில் வாழும் உயிரினங்களிலேயே பெரிய உயிரினம் என்றால் அது யானை தான். யானைகள் எண்ணிக்கையில் எவ்வளவு இருந்தாலும், ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என இரண்டே வகை யானைகள் தான் உள்ளன. யானைகளினால் வனங்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மைகள் ஏராளம். யானைகள் சராரியாக ஒரு நாளைக்கு 140 முதல் 240 கிலோ வரை உணவை உட்கொள்ளும். இதனால், ஒரு நாளில் 16 மணி நேரத்தை உணவிற்காக மட்டுமே செலவழிக்கும்.
உணவைத் தேடி தினமும் அதிக தொலைவு பயணிக்கும். அவ்வளவு பெரிய உருவம் காட்டிற்குள் வெல்லும் போதும், மரக்கிளைகளை உடைத்து உண்ணும் போதும், மற்ற விலங்குகள் செல்வதற்கான வழிகள் உருவாக்கப்படுகின்றன. அதிக தொலைவு பயணித்து செல்லும் இடங்களில் எல்லாம் தன் கழிவுகளின் மூலம் விதைகளையும் பரப்புகிறது. இப்படி மறைமுகமாக வனங்களின் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்து வருவதால், யானைகள் வாழ்ந்தால் காடும் வாழும் என்கிறார்கள்.
அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் யானையும் சேர்ந்துள்ளது. வனங்களில் உணவு கிடைக்காமல் மடிவது, காடுகளில் மனிதர்கள் போட்டுச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு வயிறு வீங்கி இறப்பது, ரயிலில் அடிபட்டு சாவது, மின் வேலிகளில் சிக்கி உயிரை விடுவது என பல காரணங்களால், ஆண்டுக்கு 200 முதல் 300 யானைகள் வரை இறக்கின்றன.
இயற்கை இறப்பு மட்டுமல்லாமல் இப்படி கொலைகளும் அதிகரித்து வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. வெடிமருந்தை சாப்பிட கொடுத்து வெடிக்க வைத்து கொலை செய்வதையும், தீயிட்டு கொழுத்தி கொலை செய்வதையும் பார்க்கும் போதும், மனிதம் எங்கே? என்று தேட வைக்கிறது. இப்படி யானைகளை துன்புறுத்துவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், நமக்கு பதிலாக கிடைப்பது ஒன்று தான். மனிதர்கள் வாழும் பகுதிக்கு யானைகள் வந்து விடுகிறது என்பது தான் அது. மனிதர்கள் வாழும் இடத்திற்கு யானை வந்ததா? இல்லை யானைகளின் இடத்திற்கு மனிதர்கள் சென்று விட்டோமா?
வனங்களில் வறட்சி நிலவும் போது, யானைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து செல்லும். அதற்காக எப்போதும் ஒரே பாதையைத் தான் பயன்படுத்தும். இந்த பாதையை தான் ’வலசை பாதை’ என்பார்கள். நாடு முழுவதும் காலம் காலமாக யானைகள் பயன்படுத்தும் 166 வலசை பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 88 பாதைகள் மட்டுமே உள்ளன. மற்றவற்றை மனிதர்கள் ஆக்கிரமித்து விட்டோம். ஆக, வழக்கமான பாதைகளில் வரும் யானைகள் பாதை இல்லாததைப் பார்த்து கோபப்படுகிறது. இப்போது கூறுங்கள், நாம் யானைகளின் இடத்திற்கு சென்றுள்ளோமா? இல்லை யானைகள் நம் இடத்திற்கு வந்துள்ளதா?
ஏற்கனவே, தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டது போக, மீதமுள்ள யானைகளையும் இப்படி துன்புறுத்திக் கொன்று கொண்டு இருக்கிறோம். இவ்வாறான மனிதத் தன்மையற்ற செயல்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். யானைகள் இருக்கும் வரை தான் காடுகள் செழிக்கும். காடுகள் இருக்கும்வரைதான் மழைபொழியும் நமக்கு தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் இருக்கும் வரைதான் மனிதன் வாழ்வான். ஒரு யானையின் அழிவு, ஒரு காட்டின் அழிவு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.




