தலைநகர் டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதே விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வருகிறது.
விவசாயிகளும் வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவோம், எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என்று போராடி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவாரத்தைகளும் தோல்வி அடைந்துள்ளன. வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் ஒரு வருடத்திற்கு நிறுத்து வைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்க மறுத்துள்ள விவசாய சங்கத்தினர், இப்போது ஒரு முடிவு தெரியவில்லை எனில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்காக, குடியரசு தினமன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டனர். இந்த பேரணியை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், காவல் துறையே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டெல்லியின் மையப்பகுதியில் நுழையாமல் அமைதியான முறையில், 26 அன்று மதியம் 12 மணிக்கு மேல் பேரணி நடத்த, காவல் துறை அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில், அசம்பாவிதம் ஏற்படுத்த முயன்ற, முகமூடி அணிந்த நபரை விவசாயிகள் கண்டறிந்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், டிராக்டர் பேரணியில் பாக்கிஸ்தானை சேர்ந்த சிலர் குழப்பம் ஏற்படுத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது.

நாட்டின் 72ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. விவசாயிகள் திட்டமிட்டபடி, டிராக்டர் பேரணி நடைபெற்றது. காவல் துறையினரால் வரையறுக்கப்பட்ட எல்லைகளை தாண்டி டெல்லி எல்லைக்குள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
ஒரு பகுதி போராட்டக்காரர்கள் தடைகளை மீறிச்சென்று, டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்தைக் கைப்பற்றினர். செங்கோட்டையின் உயரத்தில் உள்ள கோபுரத்தில் தங்கள் கொடியையும் ஏற்றியுள்ளனர். வன்முறையாக மாறிய போராட்டத்தால் டெல்லியே பரபரப்பாக மாறியுள்ளது. போராடத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்டமாக, பட்ஜெட் தாக்கப்பட்வுள்ள பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.




